Politics
“வெறும் கூச்சலால் சட்டமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது” - சிபிஐ மு.வீரபாண்டியன் கண்டனம்!

3 நாள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவை நேற்று (07-09-26) கூடியது. அப்போது காவல்துறை மீதான விவாதத்தின் போது சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். அப்போது சட்ட ஒழுங்கு நிலை குறித்தும், காவல்துறை சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் தொடர்ந்து பதிலளித்தார். அதனை தொடர்ந்து, திமுக குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடுமையாக விமர்சித்து ஆவேசமாகப் பேசினார். அதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதல்வர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். குறிப்பாக எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்ட திமுக தலைவர்கள் சபாநாயகரை நோக்கி கேள்விகளை எழுப்பினர். முதல்வர் விஜயும் சபாநாயகரிடம் வாய்ப்பு கொடுங்க என்று வலியுறுத்திக் கூறினார். அதனை தொடர்ந்து பதிலளிக்க அனுமதி தர வாய்ப்பு கொடுப்பதாகக் கூறினார். ஆனால் சிறிது நேரத்திலேயே சபாநாயகர் அனுமதி அளிக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறினார். இதனால் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்தியக் கம்யூன்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளதாவது, “சட்டமன்ற ஜனநாயக மாண்புகளை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. சட்டமன்ற பதிலுரையில் தமிழ்நாடு முதல்வர் பெண்களை இழிவுப்படுத்தும் விதத்தில் யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது. அத்துடன் சமூகவலை தளங்களில் பெண்கள் இழிவுப்படுத்தப்படுவதையும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. உயிர்புள்ள ஜனநாயகத்திற்கு சட்டமன்ற நடவடிக்கைகள் மக்களின் கோரிக்கைகளுக்கான பிரச்சனைகளை பேசவும், தீர்வு காணவும் கவனம் செலுத்திட வேண்டும்.
எதிர்கட்சிகளின் குரலுக்கு செவி சாய்க்கவும், அதற்கு உரிய முறையில் பதிலளிப்பதற்கும் மாறாக சட்டமன்ற நடவடிக்கைகளில் வெறும் கூச்சல் மிகும் வாதமுறையால் சட்டமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. சட்டமன்ற மரபையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் ஆளுங்கட்சிக்கு அதிக பொறுப்பு உள்ளது. அத்துடன் சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)