Politics
'சட்டசபையா இல்லை சினிமா சூட்டிங் ஸ்பாட்டா?'-முதலமைச்சர் விஜய்யை வறுத்தெடுக்கும் பால்கி

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே நடக்கும் விவாதங்கள் எப்போதுமே மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துபவை. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களும் சட்டங்களும் இயற்றப்பட வேண்டிய அந்தப் புனிதமான இடத்தில், தற்போதைய ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதை அனல் பறக்கும் கருத்துக்களை அரசியல் விமர்சகர் பால்கி பகிர்ந்துள்ளார்.
அரசியல் விமர்சகர் பால்கி நக்கீரன் டிவிக்கு கொடுத்த பிரத்யேக நேர்காணலில் இதுகுறித்து கூறுகையில், ''தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஏழாம் தேதி நடந்த நிகழ்வுகளைப் பார்த்தால், அது மக்கள் குறைகளைத் தீர்க்கும் இடமாகத் தெரியவில்லை. ஒட்டுமொத்த சட்டமன்ற நிகழ்வுகளையும் ஒரு சினிமா படப்பிடிப்பு போல மாற்றி வைத்திருக்கிறார் முதலமைச்சர் விஜய். சட்டமன்றத்திற்குள் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான, வாழ்வாதாரப் பிரச்சனைகள் எதைப் பற்றியும் உருப்படியான விவாதங்கள் நடத்தப்படவில்லை. எதிர்க்கட்சிகள் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் புள்ளிவிவரங்களுடன் தகுந்த பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கும் அவரது அமைச்சரவைக்கும் இருக்கிறது. ஆனால், மக்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தெரியாமல், வெறும் சினிமாத்தனமான பஞ்ச் வசனங்களைப் பேசி ஒட்டுமொத்த அவையையும் திசை திருப்பி நேரத்தைக் கடத்துகிறார்கள்.
முதலமைச்சர் விஜய் ஏதோ திரைப்படத்தில் 'வாரிசு' என்ற கதாபாத்திரத்தில் வருவது போல, நிஜ வாழ்க்கையிலும் நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்வார் என்று நம்பிதான் மக்கள் அவருக்கு ஓட்டுப் போட்டார்கள். ஆனால் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஸ்ட்ராங்கான கேள்விகளைக் கேட்கும்போது, அவற்றுக்கு முறையான பதில்களைத் தராமல் வெறும் முகம் மட்டுமே சிவக்கிறதே தவிர, வாயில் இருந்து வரும் வார்த்தைகளில் எந்தத் தெளிவும் இல்லை. மேலும், அவைக்குள் இருக்கும் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாரும் ஒரே மாதிரியான புடவைகளைக் கட்டிக்கொண்டு வந்து முதலமைச்சரிடம் வரிசையாக நின்று ஆசீர்வாதம் வாங்கும் காட்சிகள் அரங்கேறுகின்றன.
இதைப் பார்க்கும்போது இது ஒரு ஜனநாயகக் கூட்டமா அல்லது ஒரு திரைப்பட இயக்குநரைச் சுற்றி அவரது குழுவினர் அமர்ந்திருக்கும் சினிமா ஷூட்டிங் காட்சியா என்ற சந்தேகம் எழுகிறது. இப்படிப் பொறுப்பில்லாமல் சட்டமன்றத்தை ஒரு காட்சிப் பொருளாக மாற்றி வைத்திருப்பது ஆளும் தவெக அரசுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அவப்பெயரையும் அசிங்கத்தையும் தேடித்தந்துள்ளது. மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் இந்தச் சட்டமன்றக் கூட்டங்களில் மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல், வெறும் பஞ்ச் டயலாக் பேசிவிட்டுப் போனால் இந்த அரசிடம் இருந்து மக்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது. சபாநாயகர் என்பவர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது முதலமைச்சர் விஜய் எழுந்து 'பேச விடுங்கள்' என்று கூறுகிறார். உடனே சபாநாயகரும் அனுமதி தருகிறார். ஆனால் அடுத்த ஒரு நொடியிலேயே பேச அனுமதி இல்லை என்று மறுக்கிறார்கள். கிராமங்களில் நடக்கும் தெருக்கூத்தில் ஒரே ஆள் ஆண் குரலிலும் பெண் குரலிலும் மாற்றிப் பேசுவது போல இந்தச் சட்டமன்ற நிகழ்வுகள் மிகவும் கேலிக்கூத்தாக அரங்கேறுகின்றன. ஆளும் கட்சிக்கு முறையான பதில் சொல்லத் தெரியாத காரணத்தால், இந்த ஏழாம் தேதி சட்டமன்றக் கூட்டத்தை ஒரு வெற்று நாடகக் காட்சியாக மாற்றி ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறார்கள்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)





