Arts, culture, entertainment and media
டாஸ்மாக் கடைகளை அகற்றாவிட்டால் போராட்டம்: விற்பனையாளர்களிடம் தே.மு.தி.க.,வினர் மனு
விருத்தாசலம்: விருத்தாசலம் நகரில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளை அகற்றாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என விற்பனையாளர்களிடம் தே.மு.தி.க.,வினர் மனு கொடுத்தனர்.
தே.மு.தி.க., நகர செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் செம்பை உள்ளிட்ட நிர்வாகிகள் இணைந்து, விருத்தாசலம் நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்று, அங்குள்ள விற்பனையாளர்களிடம் மனு கொடுத்தனர்.
அதில், விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா எம்.எல்.ஏ., ஆய்வு செய்தபோது, பஸ் நிலையம், வழிபாட்டு தலங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிக்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், பொது மக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றப்படவில்லை.
அதன்படி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மசூதி, ஸ்டேட் பாங்க், மத்திய கூட்டுறவு வங்கி, அம்மா உணவகம், உழவர் சந்தை ஆகியவற்றுக்கு அருகில் 80, 90 மற்றும் 114 மீட்டர் தொலைவில் இயங்கி வரும் எண்.2654, 2653, 2485 மற்றும் பஸ் நிலையம் அருகில் உள்ள 2476 ஆகிய டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
இல்லாவிட்டால், வரும் 17 ம் தேதி, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து தலைமையில் டாஸ்மாக் கடைகளுக்கு முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.