Politics
“தந்தை பெரியாரின் பிறந்தநாள் ஊர்வலம் நடத்த அனுமதி” - காவல்துறை தகவல்!

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் செப்டம்பர் 17-ஆம் தேதி திராவிடர் கழகம் சார்பிலும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும் பேரணிகள் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தன. இருப்பினும், விநாயகர் சதுர்த்தி பண்டிகையைக் காரணம் காட்டி காவல் துறையினர் இந்த அண்ணா பிறந்தநாள் பேரணிக்குத் தொடக்கத்தில் அனுமதி மறுத்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், “தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த சர்க்கஸ் (Circus) அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஈரோட்டில் பெரியார் பிறந்த நாள் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு என்று வெளியான செய்திக்கு ஈரோடு காவல்துறை சார்பில் மறுப்பு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ஈரோட்டில் வருகின்ற 17.09.2026ஆம் தேதி நடைபெறவுள்ள தந்தை பெரியாரின் பிறந்தநாள் ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பு என்ற தவறான செய்தி தொலைக்காட்சியில் வெளியானது. இன்று (14.09.2026) தேதி ஈரோடு நகரக் காவல் நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பாக வருகின்ற 17.09.2026-ம் தேதி காலை 10.30 மணிக்குப் பெரியார் பிறந்த நாளில் ஊர்வலமாகச் சென்று மரியாதை செலுத்த ஈரோடு நகரக் காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தனர்.
இதனையடுத்து காவல் துறையால் மேற்படி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு செயல்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனுமதி மறுப்பு என்பது முற்றிலும் தவறான மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்தி என்பதை ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொடர் அழுத்தத்தைத் தொடர்ந்து குடியாத்தத்தில் அண்ணா பிறந்தநாள் பேரணிக்கும் காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)