Politics
“பெண்கள் பற்றி அவதூறாகப் பேசியதால் மு.க.ஸ்டாலின் கைது” - அமைச்சரின் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் (08-09-26) கூட்டத்தொடர் நிறைவடையவுள்ளது. இந்த நாளில் போக்குவரத்து, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் இன்று அவை கூடியதும் எதிர்க்கட்சி கொறடாவும் திமுக முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, சட்ட ஒழுங்கு குறித்து முதல்வர் விஜயின் பதிலுரை குறித்து விமர்சனம் செய்தார். சர்க்காரியா கமிஷன் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும், மிசா குறித்து பேசும் போது மாறனின் பெயர் குறிப்பிட்டு பேசியது அவை மீறிய செயல் என்றும் குறிப்பிட்ட எ.வ.வேலு, காவல்துறை தவிர முதல்வர் பேசிய ஆதாரமில்லாமலும், வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிற அத்தனை குறிப்புகளும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்துப் பேசிய அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார், “முதல்வர் நீதிமன்றத்தை பற்றியோ, விசாரணை பற்றியோ பேசவில்லை. எங்கு எல்லாம் ஆதாரம் இருக்கிறதோ அதை குறிப்பிட்டு பேசினார். சர்க்காரியா கமிஷனைப் பற்றி இந்த அவையில் இருக்கிறது. எங்கு எல்லாம் கலைஞர் பணம் வாங்கினாரோ அது எல்லாம் அந்த அறிக்கையில் இருக்கிறது. ஏற்கெனவே இருப்பதைப் பற்றி தான் பேசினார். சர்க்காரியா கமிஷனில் 6 குற்றச்சாட்டுகள் இருக்கிறது, அதன் அடிப்படையில் தான் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மிசா குறித்து நிறைய பேசிவிட்டார்கள். மிசா காலங்களில் திருட்டு வழக்கு, வழிப்பறி வழக்கு, பெண்கள் குறித்து வழக்குகளில் கைது செய்யலாம். ஆனால் அனைத்தையும் மிசாவில் கைது செய்தது என்று சொல்ல முடியாது.
20 அம்ச திட்டத்தை அறிவித்த இந்திரா காந்தியைப் பற்றி 21 அம்சம் திட்டம் என்று சொல்லி அவதூறாக பேசியவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது மாதிரி பல விஷயங்களைப் பற்றியதன் அடிப்படையில் தான் அவர் கைது செய்யப்பட்டார். பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார் என்று இருக்கிறது. அது தவிர மிசாவில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என எந்த குறிப்பிலும் இல்லை. அதனால் தேவையில்லாமல் பழையதை கிளப்பி இன்னமும் உங்களை தரம் தாழ்த்தி போய்க் கொண்டிருக்கிறீர்கள். அன்றைக்கு அவர் என்ன செய்தாரோ அதை தான் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் செய்துக் கொண்டிருக்கிறார். அதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் மிகவும் கண்ணியமாக சொன்னார்” என்று அவர் பேச பேச திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)