Arts, culture, entertainment and media
இடைத்தேர்தல் பரப்புரையில் முதல்வர் விஜய் பங்கேற்பாரா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

இடைத்தேர்தல் பரப்புரையில் முதல்வர் பங்கேற்பது குறித்து பொறுத்திருந்து சொல்கிறோம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலுக்காக வரும் 16ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல்வர் பங்கேற்பது குறித்த கேள்விக்கும் பதில் அளித்தார்.
ஈரோட்டில் தனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், லண்டனில் உள்ள தொழில்முனைவோர்களை அழைத்து தமிழகத்தில் பல்வேறு தொழில்களைத் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முதலமைச்சர் பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு துறையும் சரியாக பணியாற்ற வேண்டும் என தனித்தனியாக முதல்வர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
சட்டசபை நிகழ்ச்சியைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியையும் மக்கள் பார்க்காமல் உள்ள நிலைமை உருவாகியுள்ளது. முதல்வர் வெளிநாடு செல்லும் நிகழ்வு புள்ளி விவரங்களுடன் மக்கள் தெரிந்திருக்க வேண்டும் என விரும்பியது உலக வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்திருப்பது பெருமையாக கருதுகிறேன் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலுக்காக வரும் 16ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படும். தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல்வர் வருவது குறித்து பொறுத்திருந்து சொல்கிறோம். இடைத்தேர்தல் வெற்றி த.வெ.க.,விற்கு பிரகாசமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் த.வெ.க அமைச்சர் மீது ஆ.ராசா உட்பட தி.மு.க.வின் விமர்சனம் செய்வது பற்றிய கேள்விக்கு, அரசியல் பொறுத்தவரையில் ஆட்சியில் அமர்ந்தவுடன் வருகின்ற விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தி எங்களிடம் உள்ளது. அதேநேரம் அந்த விமர்சனங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். வேண்டுமென்றே விமர்சிப்பது வேறு.
பரந்தூர் விமான நிலையம் அமைய இருந்த இடத்தில் இரண்டு நீர்நிலைகள், நஞ்சை நிலங்கள், கால்வாய் இருக்கிறது. விமான நிலையத்திற்கான தேவை வேறு. சிப்காட் அமைப்பதற்கான தேவைகள் வேறு. இதனால் தான் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்றி உள்ளார். தமிழகத்தில் மின்வெட்டைக் குறைப்பதற்காக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
காற்றாலை மின்சாரம் மொத்தமாக முடங்கிவிட்டது. 50 மெகாவாட் மின்சாரம் கூட கிடைப்பதில்லை. நேற்றைய தினம் மின்வெட்டின் அளவு குறைந்திருப்பது நன்றாக தெரிந்திருக்கும். அண்டை மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அங்கு எட்டு மணிநேரம் மின்வெட்டு உள்ளதை போல் தமிழகத்தில் இருக்கக் கூடாது என அனைத்துப் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. சூரிய ஒளி மூலம் பெறப்படும் மின்சாரத்தை எப்படி சேமித்து வைக்கலாம் என்ற அடிப்படையில் மின்துறை அதிகாரிகளிடம் பல்வேறு விவரங்கள் கேட்டறியப்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் கவலைப்பட வேண்டாம். அனைத்தும் நன்றாகவே நடக்கும் என்றும் தெரிவித்தார்.
