Politics
டெண்டர் முறைகேடு புகார் எழுந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் திடீர் மாற்றம் காத்திருப்போர் பட்டியலில் வைத்தது அரசு
சென்னை, செப். 16– டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சி

டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தாம்பரம் மாநகராட்சி சார்பில், பெருங்களத்துார் ரவுண்டானாவில், ஜூலை 29ல், அசோக சக்கர துாண் திறக்கப்பட்டது. அதேபோல், சிட்லப்பாக்கம் ரவுண்டானாவில், ஆக., 6ல், தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தும் சின்னம் திறக்கப்பட்டது.
இவற்றை, அமைச்சர் சரத்குமார், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் ஆகியோர் திறந்து வைத்தனர். இது தொடர்பான பதிவுகளை, அமைச்சர் சரத்குமார், அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மாநகராட்சி சமூக வலைதளத்திலும் பதிவிடப்பட்டு இருந்தது.
ஆனால், ஜூலை 29ல் திறக்கப்பட்ட அசோகா சக்கர துாணுக்கு, 27.30 லட்சம் ரூபாயில், ஆக., 6ல் டெண்டர் கோரப்பட்டு, ஆக., 24ல் முடிவதாக காண்பிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தும் சின்னம் திறந்த பின், 18.60 லட்சம் ரூபாயில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரரை முன்பே முடிவு செய்து, டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக, அறப்போர் இயக்கத்தினர், முதல்வர் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக இருந்த பாலச்சந்தர், பணியில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு பதிலாக, ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரண்யா, மறுஉத்தரவு வரும்வரை, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலர் சாய்குமார் பிறப்பித்துள்ளார்.