Politics
ஊழல் முறைகேடு புகார்; தாம்பரம் மாநகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.
ரூ. 45 லட்சம் வரை தாம்பரம் மாநகராட்சியில் முறைகேடு நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், அம்மாநகராட்சியின் ஆணையர் பாலச்சந்திரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் சுமார் ரூ. 45 லட்சம் மதிப்பிலான இரண்டு பணிகளில், டெண்டர் முடிவதற்கு முன்பே பணி முடிந்து திறப்பு விழா நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டி ஆதாரங்களை வெளியிட்டது.
தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூரில் ரூ. 27,30,000 மதிப்புள்ள அசோகத் தூணை அமைச்சர் சரத் குமார் கடந்த ஜூலை மாதம் திறந்துவைத்தார். ஆனால், இதற்கான டெண்டரே ஆகஸ்ட் மாதம் தான் கோரப்பட்டுள்ளது என அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதேபோல், சிட்லப்பாக்கம் ஏரி அருகே ரூ. 18,60,000 மதிப்புள்ள ‘நீர் சேமிப்பு’ சிலை கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி நிறுவப்பட்டது. ஆனால், நிறுவப்பட்ட நான்கு நாட்கள் முன்பே, அதாவது ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஒப்பந்தம் கோரப்பட்டிருப்பதாகவும் அவ்வியக்கம் குற்றஞ்சாட்டியது.
அறப்போர் இயக்கம் தெரிவித்திருப்பதபடி பார்த்தால், இரண்டையும் சேர்த்தால் ரூ. 45,90,000 முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இது குறித்து புகார் எழுந்துள்ள நிலையில், தாம்பரம் மாநகராட்சியின் ஆணையர் பாலச்சந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆவடி மாநகராட்சியின் ஆணையர் சரண்யா, கூடுதலாக தாம்பரம் மாநகராட்சியை கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
