Politics
டெண்டர் முறைகேடு புகார் எதிரொலி : மாநகராட்சி ஆணையர் மாற்றம்!

தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இணைந்து கூட்டுச்சதி செய்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். அதாவது அரசு விதிகளின்படி எந்தவொரு பொதுப்பணி திட்டத்திற்கும் முறையாக டெண்டர் கோரப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னரே பணிகள் தொடங்கப்பட வேண்டும். ஆனால், இங்கு டெண்டர் நடைமுறைகளே தொடங்காத நிலையில், விதிகளை முற்றிலும் புறந்தள்ளி அனைத்துப் பணிகளும் முன்கூட்டியே முடிக்கப்பட்டு, அதற்கான திறப்பு விழாவும் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இந்த டெண்டர் சட்ட விதிமீறல் மற்றும் கூட்டுச்சதி முறைகேடு தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் உடனடியாக விரிவான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் வலியுறுத்தியது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் எஸ். பாலச்சந்தர் உடனடியாகப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலாளர் மு. சாய் குமார் இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அரசாணையில் இந்த பணியிட மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பாலச்சந்தர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆவடி மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வரும் ஆர். சரண்யா, கூடுதல் பொறுப்பாகத் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பதவியைக் கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அவர் இந்த கூடுதல் பொறுப்பை வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம், சென்னை, தாம்பரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள நகராட்சி நிர்வாக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)