Sport
முதல்வர் கோப்பை திருவிழா 9ல் துவக்கம்
திருப்பூர்:மாநில முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான திருப்பூர் மாவட்டத் தேர்வுப் போட்டிகள் வரும் 9ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை நடைபெறுகின்றன. இதில் பங்கேற்க, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என, 63 ஆயிரத்து 639 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகள் அக்.-நவ., மாதங்களில் நடைபெறவுள்ளதால், மாவட்ட அளவிலான போட்டிகளை இம்மாதத்துக்குள் முடிக்க விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது. காலாண்டுத் தேர்வு நெருங்குவதால், பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் முதலில் நடத்தப்படுகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, 32 ஆயிரத்து 981 பள்ளி மாணவ, மாணவியர்; 18 ஆயிரத்து 761 கல்லூரி மாணவ, மாணவியர்; 2,422 அரசு ஊழியர்கள்; 581 மாற்றுத்திறனாளிகள்; 8,901 பொதுமக்கள் என மொத்தம் 63 ஆயிரத்து 639 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கான தடகளம், இறகுபந்து, டேபிள் டென்னிஸ், வாலிபால், கால்பந்து, கபடி, கூடைப்பந்து, சிலம்பம், கிரிக்கெட், நீச்சல், எறிபந்து, கோ-கோ, கேரம், செஸ், ஸ்பீடு ஸ்கேட்டிங், யோகாசனம் உள்ளிட்ட போட்டிகள் வரும் 9 முதல் 16ம் தேதி வரை நடைபெறுகின்றன.
அதைத் தொடர்ந்து கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
நிப்ட்-டீ, தீரன் சின்னமலை கல்லுாரி, சிக்கண்ணா கல்லுாரி, ஏஞ்சல் இன்ஜினியரிங் கல்லுாரி, பார்க்ஸ் கல்லுாரி உள்ளிட்ட, 35 இடங்களில், 45 வகையான போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டென்னிஸ், குத்துச்சண்டை, ஜூடோ ஆகிய போட்டிகளை மாவட்ட அளவில் நடத்தாமல், மண்டல அளவில் நடத்த விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான மண்டல போட்டிகள் திருப்பூரில் உள்ள டீ பப்ளிக் பள்ளி, ஏஞ்சல் இன்ஜினியரிங் கல்லுாரி மற்றும் எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் நடைபெற உள்ளன.