Politics
'தினமலர்' செய்தி எதிரொலி: 4 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

உத்திரமேரூர்:நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, உத்திரமேரூர் தாலுகாவில் நான்கு இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன.
உத்திரமேரூர் தாலுகாவில் உள்ள கிராமங்களில் நவரை பருவத்தை தொடர்ந்து சொர்ணவாரி பருவத்திற்கு கிணறு மற்றும் ஆழ்த்துளை கிணற்று பாசனம் மூலம், 13,000 ஏக்கர் நிலப் பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டனர்.
இந்தப் பயிர்கள் அறுவடைக்கு தயாரானதை தொடர்ந்து, ஒரு மாதமாக பல பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
எனினும் சொர்ணவாரி பருவத்திற்கான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் அறுவடையான நெல்லை விவசாயிகள் கொள்முதல் நிலையம் இயக்க வேண்டிய பகுதிகளில் குவித்து வைத்து விற்பனை செய்ய காத்துள்ளனர்.
இதனிடையே, மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்யும் மழையால் கொள்முதல் செய்ய குவித்து வைத்துள்ள நெல்லை பாதுகாப்பதில் விவசாயிகள் சிரமபட்டு வருகின்றனர்.
சில இடங்களில் மழையால் நெல் முளைப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் திறக்கப்படாததை கண்டித்து கரும்பாக்கம், அரும்புலியூர் ஆகிய பகுதி விவசாயிகள் நேற்று முன்தினம் கரும்பாக்கத்தில் மறியல் போராட்டத்திற்கு முயன்றனர்.
அப்போது, அப்பகுதி நெல் கொள்முதல் அலுவலர் பாலமுருகன் அங்கு வந்து விவசாயிகளிடம் சமாதானம் பேசி, கொள்முதல் நிலையம் திறப்பதாக உறுதி அளித்தார்.
இதுகுறித்து நம் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. அதையடுத்து, கரும்பாக்கம், அரும்புலியூர், களியப்பேட்டை, பேரணக்காவூர் ஆகிய நான்கு இடங்களில் நேற்று அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் பெறப்பட்டன.