Politics
நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் கலெக்டர்களுக்கு சிக்கல்; வருவாய் துறையினரின் கணக்குக்காக காத்திருப்பு
- நமது நிருபர் -தமிழகத்தில், இந்த ஆண்டு முதல், வருவாய்த் துறையினர் ஒவ்வொரு இடத்திலும் நெல் கொள்முதல்

தமிழகத்தில், இந்த ஆண்டு முதல், வருவாய்த் துறையினர் ஒவ்வொரு இடத்திலும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் முன், அப்பகுதியில் எவ்வளவு ஏக்கர் நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது,
எவ்வளவு அளவு கொள்முதல் செய்யப்படும் என்பதை கணக்கிட்டு, கலெக்டரிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், அப்பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாலும், தமிழகம் முழுதும் நெல் அறுவடை செய்துள்ள விவசாயிகள், கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை எடுத்துச் செல்ல முடியாமல், பாதுகாக்கவும் முடியாமல், சாலைகளில் கொட்டி, தவியாய் தவிக்கின்றனர்.
விஜய் தலைமையிலான அரசு, அடுத்த மழை பெய்வதற்குள், அவசரகால அடிப்படையில் இப்பிரச்னைக்கு தீர்வு காணவில்லை எனில், இந்தாண்டு தமிழகத்தின் அரிசி சப்ளையில் கடும் பாதிப்பு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் விளைவிக்கப்படும் நெல்லை, இந்திய உணவு கழகத்தின் முகவர் என்ற முறையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் கொள்முதல் செய்து தருகிறது.
கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், நாடு முழுதும் பொது வினியோக திட்டத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு, இந்திய உணவு கழகம் வாயிலாக மத்திய அரசு நிதி உதவியை வழங்கி வருகிறது.
இந்திய உணவு கழகம், ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள்முதல் செய்ய, அக்., 1-ம் தேதி முதல் செப்., 30-ம் தேதி வரை கொள்முதல் பருவ காலத்தை நிர்ணயித்திருந்தது.
இந்த பருவத்தில் தமிழக விவசாயிகள் விளைவிக்கும் குறுவை, சம்பா, தாளடி, கோடை நெல் ஆகியவற்றை கொள்முதல் செய்ய, நுகர்பொருள் வாணிப கழகம், கிராம அளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வருகிறது.
ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள், குறைந்தபட்ச ஆதரவு விலை, ஊக்கத்தொகை ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றன. ஆனால், 2022-ம் ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை, வழக்கமான ஜூன் 12-ம் தேதிக்கு முன்னதாகவே, மே 24ம் தேதி திறக்கப்பட்டது.
இதனால், குறுவை சாகுபடியும் முன்கூட்டியே தொடங்கி, அறுவடைக்கு வந்ததால், தமிழக அரசு கொள்முதல் பருவத்தை அக்., 1-க்கு பதிலாக மத்திய அரசு அனுமதியுடன் செப்., 1ம் தேதியே தொடங்கியது.
இந்த ஆண்டு மத்திய அரசின் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை என, கூறப்பட்டு வந்தது.
ஆனால், அதற்கான அரசாணை முன்கூட்டியே வெளியானது தெரிந்ததும், 4,315 கொள்முதல் நிலையங்களைத் திறக்க அரசு அனுமதித்தது. ஆனால், தவிர்க்கக்கூடிய பல சிக்கல்கள் காரணமாக, தமிழக முழுதும், வெறும், 400 கொள்முதல் நிலையங்களே திறக்கப்பட்டுள்ளன.
இதனால், பல இடங்களில், 15 நாட்களாக விவசாயிகள் நெல்லை விற்பனைக்காக கொட்டி வைத்து, வேதனையுடன் காத்திருக்கின்றனர். பல இடங்களில் மழை பெய்து வருவதால், நெற்களில் ஈரப்பதம் அதிகரித்து, பயிர் முளைக்கும் நிலை ஏற்பட்டு விடும்.
நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கு காலதாமதம் ஆவதற்கு, பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்துக்கும் உட்பட்ட பகுதிகளில், 10 சதவீதம் அறுவடை பணிகள் முடிந்தாலே, கொள்முதல் நிலையங்களை திறக்க, வழக்கமாக கலெக்டர்கள் உத்தரவிடுவர்.
இந்த ஆண்டு, வருவாய்த் துறையினர் ஒவ்வொரு இடத்திலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கும் முன், அப்பகுதியில் எவ்வளவு ஏக்கர் நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது; எவ்வளவு அளவு கொள்முதல் செய்யப்படும் என்பதை கணக்கிட்டு, கலெக் டரிடம் வழங்க வேண்டும்.
அதன் அடிப்படையில், கலெக்டர் உத்தரவிட்ட பிறகே, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்ற புதிய உத்தரவு உள்ளது.
வருவாய்த் துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டு முறையாக ஆவணங்களை வழங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தான் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் சிக்கல் ஏற்பட் டுள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
ஒரு நெல் மூட்டைக்கு, 40 - 50 ரூபாய் வரை லஞ்சமாக, கொள்முதல் நிலைய ஊழியர்கள், கடந்த ஆண்டு வரை எங்களிடம் பெற்றனர். அந்தப் பணத்தை, அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை பகிர்ந்தளித்துக் கொடுத்து வந்தனர். புதிய அரசு அமைந்த பிறகு நெல் கொள்முதல் நிலையங்களில், எங்களிடம் எந்தவித லஞ்சமும் வாங்கக்கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை எடுத்துச் செல்ல வரும் லாரி டிரைவர்களுக்கு எப்படி பணம் கொடுப்பது, ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு எப்படி செலவு செய்வது, வேலைக்கு சேர கொடுத்த லஞ்ச பணத்தை எப்படி சம்பாதிப்பது போன்ற, 'பல' காரணங்களால், கொள்முதல் நிலைய பணியாளர்கள், நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க ஆர்வம் காட்டவில்லை.
மாவட்டத்தோறும் லாரிகளை இயக்க, 'டெண்டர்' விடாமல், முந்தைய அரசால் அனுமதிக்கப்பட்ட பழைய நபர்களே லாரிகளை இயக்குவதால், அவர்களும், 'காசு பார்க்காமல்' லாரிகளை இயக்க மறுக்கின்றனர்.
கொள்முதல் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் பெரிய அளவில் இல்லை. நெல்லை மூடிப் பாதுகாக்கத் தேவையான தார்பாய்கள் கூட முறையாக வழங்கப்படுவதில்லை. நெல், மழையில் நனைந்து வீணாகின்றன என்பது உட்பட பல்வேறு காரணங்களால் நெருக்கடிக்கு உள்ளாகும் போது, நெல் உற்பத்தியை குறைப்பதற்காக, புதிய நடைமுறை சிக்கல்களை, வருவாய் துறையினர் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளே, செயற்கையாக உருவாக்குகின்றனர். இவ்வாறு விவசாயிகள் கூறுகின்றனர்.