Politics
“நெல் கொள்முதல் பணிகள் எவ்வித தொய்வுமின்றி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” - தமிழக அரசு விளக்கம்!

நடப்பு கே.எம்.எஸ் 2026-2027-ம் பருவத்தில் சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2750/-, பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2600/- என்ற உயர்த்தப்பட்ட விலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இது வரை 42,082 மெ.டன் நெல் கொள்முதல் செய்துள்ளது தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொட்ர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “வசாயிகளிடமிருந்து நெல்லை உரிய விலையில் கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை பாதுகாப்பாக சேமித்து வைப்பது மற்றும் உரிய காலத்தில் அரைவைக்கு அனுப்புவது ஆகிய பணிகளில் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
நடப்பு கொள்முதல் பருவம் கே.எம்.எஸ் 2026-2027-ற்கு ஒன்றிய அரசால் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2461/-ம் பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2441/-ம் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டு, 01.09.2026 முதல் நெல் கொள்முதல் செய்திட அனுமதி வழங்கியுள்ளது. மேலும், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் நெல்லுக்கான ஊக்கத் தொகையாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.156/-லிருந்து ரூ.289/-ஆகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.131/-லிருந்து ரூ.159/-ஆகவும் உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், நடப்பு கொள்முதல் பருவம் கே.எம்.எஸ் 2026-2027-ல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையுடன், மாநில அரசின் நெல்லுக்கான ஊக்கத் தொகையுடன் சேர்த்து சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2750/- என்ற விலையிலும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2600/- என்ற விலையிலும் நெல் கொள்முதல் மேற்கொள்ள தமிழ்நாடு அரசால் உத்தரவு வழங்கப்பட்டதன் அடிப்படையில் 11.09.2026 வரையிலான தமிழ்நாடி நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், செங்கல்பட்டு, ஈரோடு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, தேனி மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் முதற்கட்டமாக 401 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 7,043 விவசாயிகளிடமிருந்து 42,082 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், நெல் வரத்தின் அடிப்படையில் தேவைக்கேற்ப மாவட்ட ஆட்சியர்களின் அனுமதி பெற்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திட முதுநிலை மண்டல மேலாளர்கள் / மண்டல மேலாளர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் நெல்லினை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாத்து உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு இயக்கம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் படாளம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேடப்பாளையம் மற்றும் வேடல் ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை 09.09.2026 அன்று கள ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடமிருந்து நெல் மணிகளை தாமதமின்றி கொள்முதல் செய்திடவும் அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மணிகளை பாதுகாப்பாக இருப்பு வைக்கவும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் 11.09.2026 அன்று இராணிப்பேட்டை மண்டலத்தில் கொள்முதல் நிலையங்களை கள ஆய்வு செய்து, விவசாயிகளிடமிருந்து உரிய காலத்தில் நெல்லினை கொள்முதல் செய்து உடனுக்குடன் கிடங்குகளுக்கு இயக்கம் செய்திடவும், பாதுகாப்பாக நெல்லினை இருப்பு வைத்திடவும், உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள். மேலும் கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மண்டலங்களில் நெல் கொள்முதலை துரிதப்படுத்தவும், கொள்முதல் செய்த நெல்லினை உடனடியாக இயக்கம் செய்யவும், பாதுகாப்பாக இருப்பு வைக்கும் பணிகளை கண்காணிக்கவும் அயல் மண்டல மேலாளர்கள் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது மேலும் விவசாயிகளின் நலனை கருதி விடுமுறை தினமான 13.09.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் செய்ய கடலூர் மயிலாடுதுறை திருவாரூர் செங்கல்பட்டு ஈரோடு மற்றும் திருவள்ளூர் மண்டலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்கள் மூலமாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு விவசாயிகளிடமிருந்து எவ்வித தாமதமின்றி நெல் கொள்முதல் செய்திடவும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை உடனுக்குடன் இயக்கம் செய்திடவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால். நெல் கொள்முதல் பணிகள் எவ்வித தொய்வுமின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)