Politics
தபால் மூலம் லைசென்ஸ்களை வீடுகளுக்கு அனுப்பும் முறை இன்று முதல் நிறுத்தம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

இதனிடையே, முதலமைச்சர் விஜய் அறிவித்த டிஜிட்டல் உரிம பதிவிறக்கத் திட்டத்தை எதிர்த்து பெங்களூரு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
புதிய ஓட்டுநர் உரிமங்களை தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பும் முறை இன்று முதல் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் முதலமைச்சர் விஜய் இதுதொடர்பான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ்களை அச்சிட்டு தபால் மூலம் அனுப்பும் நடைமுறை நிறுத்தப்பட்டு முழுமையான டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மற்றும் டிஜிட்டல் வாகனப் பதிவுச் சான்றிதழ் சேவை வரும் 15ஆம் தேதி அமலுக்கு வரவுள்ள நிலையில், அன்றைய நாள் முதல் ஓட்டுநர் உரிமத்தை இ-சேவை மையங்களில் பிரின்ட் அவுட் எடுக்கலாம். இனி, புதிதாக வாகனம் வாங்குவோர், வாகனப் பதிவை முடித்தவுடன் அதற்கான டிஜிட்டல் பதிவுச் சான்றிதழை இணையம் வழியாக நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வு முடிந்த அன்றைய தினமே ஓட்டுநர் உரிமம் டிஜிட்டல் முறையில் உடனடியாக வழங்கப்படும். இதனிடையே, முதலமைச்சர் விஜய் அறிவித்த டிஜிட்டல் உரிம பதிவிறக்கத் திட்டத்தை எதிர்த்து பெங்களூரு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் ஆவணங்களைப் பெற இயலாது என வாதிடப்பட்ட நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு 2 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
