Politics
டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழை டிஜிட்டல் முறையில் வழங்கும் திட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பொதுமக்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் செப்டம்பர் 2-ஆம் தேதி அறிவித்திருந்தார். அன்றைய தினமே, அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும், மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கும் போக்குவரத்து ஆணையர் கடிதம் அனுப்பியிருந்தார்.
அதில், செப்டம்பர் 12-ஆம தேதி முதல், ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும், டிஜிட்டல் முறையில் அனுப்ப வேண்டும் எனவும், சான்றிதழ்களை விண்ணப்பதாரர்களுக்கு அச்சிட்டு அனுப்பும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து பெங்களூருவைச் சேர்ந்த ஃபோர்ஸ் ஐடென்டிபிகேசன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக அரசின் டிஜிட்டல்மயமாக்கும் முடிவு மத்திய அரசின் சட்டங்களுக்கு விரோதமானது, என்பதால், அதனை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், டிஜிட்டல் மயமாக்கினால், மொபைல் போன், ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் தங்கள் ஆவணங்களைப் பெற இயலாது என்றும், டிஜிட்டல்மயமாக்குவதுடன் கூடுதலாக அச்சிட்டு வழங்கும் நடைமுறையையும் பின்பற்ற வேண்டும் என்று வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச்சான்று நாளை (செப்.12) முதல் ரத்து செய்திருக்கக்கூடிய சூழலில் அந்த ஆவணங்களை இ-சேவை மையங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து, அச்சிட்டுப் பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய அரசின் பரிவாகன் இணையதளத்தின் மூலமாகவே, இந்த நடைமுறை மேற்கொள்ளப்படவுள்ளது.
ராஜாஸ்தான், கேரளம், அசாம் உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் ஏற்கெனவே டிஜிட்டல்மயமாக்கலுக்கு மாறியுள்ள சூழலில், இந்தப் பட்டியலில் தமிழகம் 7-ஆவது மாநிலமாக இணைந்துள்ளது. ஊழலை ஒழிக்கவும், வீட்டில் இருந்தே விண்ணப்பித்து சேவையை விரைந்து பெறவும் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
