Politics
சட்டமன்றம் உதயநிதி அடிக்கும் சிக்ஸர்கள்!

100 நாளைக் கடந்து நகர்ந்துகொண்டிருக்கிற முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. கூட்டணி அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் செப். 8-ஆம் தேதியோடு நிறைவுபெறுகிற நிலையில், முதல்வர் விஜய்யையும் த.வெ.க. அரசையும் எதிர்த்து செப்டம்பர் 3-ஆம் தேதி தொடர் சிக்ஸர்கள் அடித்திருக் கிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் செப்.03-ஆம் தேதி காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "இன்று சட்டம்- ஒழுங்கு குறித்துப் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளீர்கள். மக்கள் பிரச்சனைகள் சார்ந்து நான் எழுப்புகின்ற கேள்விகளுக்கு டைவர் ஷனோ, பழிபோடுகின்ற தந்திரங்களோ இல்லாமல் முதலமைச்சர் உரிய பதிலைக் கொடுப்பார் என்கின்ற நம்பிக்கையில் பேச்சை நான் தொடங்குகிறேன்.
இந்த அரசு கொடுத்திருக்கக் கூடிய கொள்கைவிளக்கக் குறிப்பு நேற்றிரவு 12.00 மணியளவில் என்னிடம் வந்துசேர்ந்தது. அதை நான் படித்துப் பார்த்தேன். திராவிட மாடல் ஆட்சி யில் குற்றங்கள் குறைந்திருக்கிறது என்று அந்த கொள்கைவிளக்கக் குறிப்புப் புத்தகத்தில் 293, 295, 296 ஆகிய பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, வழிப்பறி, திருட்டு ஆகிய குற்றங்கள் 2024-ஆம் ஆண்டைக் காட்டிலும், 2025- ஆம் ஆண்டில் பெருமளவில் குறைந்திருக்கிறது என்று 'புள்ளி விவரங்களுடன்' புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொலை முயற்சி, கலவரங்கள், பாலியல் குற்றங்கள் அனைத்தும் குறைந்திருக்கிறது என்று 'புள்ளிவிவரங்கள்' கூறுகின்றன. சொல்லப்போனால் சாதியப் பாகுபாடு கொலைகள் பெருமளவில் குறைந் திருக்கிறது என்று அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே, எங்களது திராவிட மாடல் ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு நன்றாக இருந்தது என்று காவல்துறை யின் கொள்கை விளக்கக் குறிப்பில் நேர்மையாக ஒப்புக்கொண்டதற்கு முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்''’என முதல் சிக்ஸரை விளாசினார்.
பின்பு தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பற்றி பேசிய உதயநிதி, "இந்த அரசு அமைந்து சரியாக 116 நாட்கள் ஆகிறது. இந்த 116 நாட்களில் இந்த அரசு புதிதாகக் கொண்டுவந்த திட்டங்களைவிட, எங்களுடைய அரசு கொண்டுவந்த திட்டங்களை அதிகமாக ரத்து செய்திருக்கிறார்கள். இந்த அரசிடமிருந்து பெயர் மாற்ற அறிவிப்பு வருகிறது; அப்படி இல்லையென்றால் திட்டமே ரத்து என்ற அறிவிப்பு வருகிறது. பரந்தூர் விமான நிலையம், காஞ்சிபுரம் புதுநகர் திட்டம் என இந்த லிஸ்ட் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
எங்களுடைய ஆட்சியில் தமிழ்நாடு 'டாப் கியரில்'- சென்றுகொண்டிருந்தது. ஆனால் இந்த 116 நாட்களில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் சென்றுகொண்டிருக்கிறது. நான் முதலமைச்சரிடம் கேட்கவிரும்புவது, தி.மு.க. அரசு தமிழ்நாட்டின் நலனுக்காகக் கொண்டுவந்த திட்டங்களை எதற்காக ரத்து செய்துள்ளீர்கள்?
தேர்தல் வாக்குறுதியில் ஏராளமான திட்டங்களைக் கூறியிருந்தீர்கள். ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே நிறைவேற்றிவிடுவோம் என்று கூறியிருந்தீர்கள். ஆனால் விவசாயக் கடன் தள்ளுபடிக்கு பல்வேறு 'ஸ்லாப்'கள் வைத்துள்ளீர்கள். மூன்று சிலிண்டர்கள்தான் அதுவும் அடுத்த ஆண்டுதான் வழங்கப்படும் என்று கூறிவிட்டீர்கள். "தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் என்று சொன்னீர்கள். ஆனால் இந்த அரசின் அறிவிப்புகளைப் பார்த்தால் எல்லா திட்டத்திற்கும் மொத்தமாகச் சேர்த்து "தாய்மாமன் காதுகுத்தும் திட்டம்' என்று பெயர் வைத்துவிடலாம்.
இந்த அரசின் திட்டங்கள் மக்களை ரீச்சாவதைவிட, ரீல்ஸ் ரீச்சானால் போதும் என்ற வகையில்தான் அரசின் செயல்பாடு உள்ளது. இந்த நிலை எப்போது மாறும்?” என்று கேள்வியெழுப்பி இன்னொரு சிக்ஸ் விளாசினார்.
பின்பு சட்டம் ஒழுங்கு, காவல்துறை பற்றி ஸ்டீயரிங்கைத் திருப்பிய உதயநிதி, “"தமிழ்நாட்டில் காவல்துறையின் சீர்திருத்தத்திற்காக இதுவரை அமைக்கப்பட்ட ஐந்து காவல் ஆணையங்களில் நான்கு காவல் ஆணையங்கள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டவை. கடைசியாக, 2023-ஆம் ஆண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியில் ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் செல்வம் தலைமையில் ஐந்தாவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டது.
ஐந்தாவது காவல் ஆணையம் 800 பரிந்துரைகளை அளித்திருந்தது. அதில் 86 பரிந்துரைகளை தி.மு.க. ஆட்சியில் படிப்படியாக நாங்கள் நிறைவேற்றிக் காட்டினோம். இந்த அரசை நான் கேட்டுக்கொள்வது, மீதமுள்ள பரிந்துரைகளை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்றவேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டுவதில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு நிச்சயம் சிறப்பாகச் செயல்பட்டது. இதுவரை இல்லாத வகையில் அதிகளவிலான போதைப்பொருட்களை தி.மு.க. ஆட்சியில் நாங்கள் பறிமுதல் செய்திருக்கிறோம். வேலூரில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் 32 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம்.
ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை? சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இல்லை. இது வெறும் குற்றச்சாட்டு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிலைமை. 116 நாள் ஆட்சியில் மக்களுக்கு, குறிப்பாக, பெண்களுக்கு இது மிகப்பெரிய "ட்ராஜடியாக' மாறியுள்ளது. தினம் நியூஸ் பேப்பரைத் திறந்துபார்த்தால் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள். கறிக்கடையில்கூட இந்த அளவிற்கு யாரும் வெட்டமாட்டார்கள். அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் தினசரி வெட்டு, குத்து நடந்துகொண்டிருக்கிறது.
இந்த ஆட்சி அமைந்த 116 நாட்களில் 10 ஆணவக் கொலை நடந்திருக்கிறது. அதில் ஒன்றுக்குக்கூட முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. முன்பெல்லாம் ஆணவக்கொலைகள் என்று கூறியிருந்தார்கள். இந்த
ஆட்சி அமைந்தவுடன் கௌரவக் கொலைகளாக மாற்றினார்கள். இப்போது அதெல்லாம் காதல் மரணங்கள் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். ஏற்கனவே, இந்த அவையில் பதிய வைத்திருக்கிறேன். அந்த பெண் புகார்கொடுத்தும் சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மேல் இந்த அரசு இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த இன்னொரு பெண் உறுப்பினர், ஆளுங்கட்சியின் நிர்வாகிகளான டிரைட்வர், ரூஸ்வெல்டு என இரண்டு பேர் மேல் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருக்கிறார். அந்த வழக்கிலும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சென்னையில், ஆளுங்கட்சியின் ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி, ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத் திருக்கிறார். அவரை கட்சியைவிட்டு நீக்குவதாக செய்திகள் வந்தன. ஆனால், கைதான சில நாட்களிலேயே வெளியேவந்து, ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற ஒரு அரசு நிகழ்ச்சியிலேயே அவரும் பங்கேற்றுள்ளார்.
ஆளுங்கட்சியின் இராணிப்பேட்டை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் விஜய் மோகன். ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தார். நான்கு பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்தும், இதுவரை கைதுசெய்யவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை காசிமேட்டில், ஆளுங்கட்சியின் ஆர்.கே.நகர், 43-ஆவது வார்டு பொறுப்பாளராக இருந்த பாம்பு' தினேஷ் 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சேலத்தில், பொள்ளாச்சி சம்பவத்துக்கு இணையாக 50-க்கும் அதிகமான பெண்களை ஆபாசப் படங்கள் எடுத்து மிரட்டியதாக ஆளுங்கட்சிப் பிரமுகர் மணிகண்டன் மேல் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். சிவகங்கையில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை கொடுத்த ஆளுங்கட்சி நிர்வாகி மகாராஜா, ராபின், ஹரீஷ் என பட்டியல் நீள்கிறது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் காவல் மரணங்களுக்கு எதிராகப் பேசிய தற்போதைய முதலமைச்சர் அவர்கள், ‘"ஸாரி வேண்டாம், எங்களுக்கு நீதிதான் வேண்டும்'’ என்று பேசினார். ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்து 116 நாட்களில் இதுவரைக்கும் 8 காவல் மற்றும் சிறை மரணங்கள் நடந்திருக்கின்றன. இதற்கெல்லாம் இதுவரைக்கும் நீதியும் கிடைக்கவில்லை. முதலமைச்சரிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு ஸாரியும் வரவில்லை. இந்தச் சம்பவங்களில் இதுவரைக்கும் இந்த அரசு, முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று கேட்க விரும்புகிறோம்''’என அடுத்த சிக்ஸை விளாசினார்.
இதற்கெல்லாம் பதில்சொல்லவேண்டிய போலீஸ் மந்திரியும் முதல்வருமான விஜய், அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தார். அவ ருக்கு பதிலாகப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தி.மு.க. ஆட்சியில் நடந்த குற்றச் சம்பவங்களை பட்டிய லிட்டார். அப்போது "தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத் தும் ஏன் நீங்கள் நடவடிக்கை எடுக்க வில்லை?''’என்று தி.மு.க.வுக்கு சவால்விடுத்தார்.
உடனே எழுந்த உதயநிதி, "நானும் சவால் விடுகிறேன், அருணா ஜெகதீசன் அறிக்கை தற்போது உங்கள் கையிலிருக்கிறது. எங்களால் எடுக்கமுடியாத நடவடிக்கையை நீங்கள் இப்போது எடுங்கள். தைரியமிருந்தால் எடுங்கள். தைரியம் இருக்கிறதா?''’என்று எதிர் சவால் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "அரசை விமர்சிக்கும் ஜென்சி இளைஞர்கள், பத்திரிகை யாளர்களை கைதுசெய்வதில் ஆர்வம் காட்டுகிறீர் கள். ஆனால், முதலமைச்சரை வெளிப்படையாக விமர்சித்துப் பேசுகின்ற பா.ஜ.க. தலைவர்கள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவுசெய்யப்படவில்லை. ஒரு புகார்கூட கொடுக்கவில்லை. அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்ய பயமா? பா.ஜ.க. அடித்தாலும், வலித்தாலும் வெளியே சொல்லக்கூடாது என்கிற ஆளும் கட்சியின் அரசியல் வியூகத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை''’ என்ற உதயநிதி, இதற்கெல்லாம் முதல்வர் பதிலளிக்க வேண்டும் என்றார்.
ஒருகட்டத்தில் எழுந்த முதல்வர் விஜய், "உறுப்பினர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் மன்டே (திங்கள்கிழமை) பதில் சொல்கிறேன். நான் பேசும்போது யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது''’என்றவர், சபையை விட்டு வெளியேறினார். இது த.வெ.க.வினருக்கே அதிர்ச்சியைத் தந்தது. இதனைப் பார்த்த உதயநிதி அந்த வாய்ப்பையும் தவறவிடாமல், "யாரும் ஓடக்கூடாதுன்னு சொன்னார் முதல்வர். கடைசியில் யார் ஓடிப்போனார்கள்ங்கிறது தெரிகிறது. முதல்வர் ஓடிவிட்டார்''’என்றொரு சிக்ஸ் சுழற்றினார்.
உதயநிதி பேசும்போது பலமுறை ஆளும்கட்சியினரால் குறுக்கீடு செய்யப்பட்டது. ஆனாலும் அசராமல் பதிலடி தந்தார் உதயநிதி.
செப்டம்பர் 4-ல் மட்டும்தான் என்றில்லை, ஆகஸ்டு 21-ஆம் தேதி சட்டசபை கூடியதும் ஒரு முக்கிய பிரச்சனையை பேசுவதாக சொல்லிவிட்டு பேசிய உதயநிதி, “"நேற்று முன்தினம் பேரவையில் பேசிய முதல்வர், தன்னுடைய டேபிளில் 3 கோப்புகள் இருப்பதாகவும் அதைத் திறக்க வைத்துவிடாதீர்கள் என்றார். முதல்வர் அந்த கோப்புகளை திறந்து பார்க்கவேண்டும்; எதற்காக பயம்..? இதையே 3 மாதமாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்; ஜோசியக்காரர் சொன்னால் தான் திறந்துபார்ப்பீர்களா?''’என்று கேட்க, சபையில் ஏக ரகளை. சில நிமிட பரபரப்புக்குப் பிறகு மீண்டும் பேசிய அவர், "முதல்வர் 3 ஃபைல்கள் என் டேபிள்மீது இருக்கிறது என்று சொன்னாரே. நான் வெறுமனே சவால் விடவில்லை, முதல்வருக்கு நான் பகிரங்க சவால்விடுகிறேன். அந்த ஃபைல்களை முதல்வர் திறக்கட்டும். எது தடுக்கிறது? எதற்காக பயப்படுகிறீர்கள்? காலம் கடத்துகிறீர்கள்? இதையே 3 மாதமாக சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். ஆதாரமிருந்தால் நடவடிக்கை எடுங்கள். சினிமாவில் பேசுவதுபோல சட்டமன்றத்தில் பஞ்ச் டயலாக் பேசுவதெல்லாம் சரிவராது. உங்கள் உருட்டல், மிரட்டலுக்கெல்லாம் தி.மு.க. அஞ்சாது''’என்றார் உதயநிதி ஆவேசமாக.
இதேபோல மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய். அதன்மீது பேசிய உதயநிதி, "தொகுதி மறுவரையறைங்கிற பேரில் தமிழ்நாடு எந்தவகையிலும் பாதிக்கக்கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. மக்கள் தொகை அடிப்படையில் இந்த வரையறை கொண்டு வந்தால், தென்மாநிலங்களுக்கு எந்தளவுக்கு அது ஆபத்தை ஏற்படுத்துமென இந்தியாவுக்கே முதன்முதலில் சொன்ன இயக்கம் தி.மு.க.
இதே சட்டமன்றத்தில் இதற்காக 2024-லேயே தீர்மானம் நிறைவேற்றியவர் எங்கள் தலைவர் (ஸ்டாலின்). தமிழ்நாட்டின் எம்.பி.க்களின் விகிதாச்சாரம் 7.18 சதவீதத்தை குறைக்க அனுமதிக்கக்கூடாது''’என்று ஆரம்பித்து இப்பிரச்சனைகளுக்காக தி.மு.க. அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை உதயநிதி சுட்டிக் காட்டியபோது, பேரவை அதிர்ந்தது.
இப்படி, சட்டப்பேரவையில் தி.மு.க.வுக்கு எதிராக த.வெ.க. வீசிய ஒவ்வொரு பந்தையும், மக்கள் பிரச்சனைகளுக்காகவும் தங்களை நக்கலடித்த முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு எதிராகவும் சிக்சர்களாக அடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)





