Religion
ராமநாதபுரம் மாவட்டத்தில் 600 விநாயகர் சிலைகள்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 600 விநாயகர் சிலைகளை ஹிந்து முன்னணி சார்பில் செப்.,13, 14ல் பிரதிஷ்டை செய்ய உள்ளனர்.
செப்.,14ல் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாடு முழுவதும் விநாயகர் சிலைகளை மக்கள் பிரதிஷ்டை செய்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.
அதன்படி ஹிந்து முன்னணி சார்பில் செப்.,13, 14ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் 600 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய உள்ளனர்.
இச்சிலைகளுக்கு அந்தந்த பகுதி மக்கள் செப்.,14ல் பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்வார்கள். ராமேஸ்வரம் திட்டக்குடி தெரு, காட்டுபிள்ளையார் கோவில் தெரு, வேர்கோடு, இந்திரா நகர், பெரிய பள்ளிவாசல் தெரு, கரையூர், புதுரோடு உள்ளிட்ட 30 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய உள்ளனர்.
இதுகுறித்து ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது: செப்.,15ல் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், பரமக்குடியில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைக்க உள்ளோம்.
செப்.,16ல் ராமநாதபுரம், தேவிபட்டினம், ஏர்வாடி, திருப்புல்லாணி, தொண்டி, முதுகுளத்துார் ஆகிய பகுதிகளிலும், செப்., 17ல் கீழக்கரையில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க உள்ளோம் என்றார்.