Politics
“12 ஏக்கர் போதும்... யுனிவர்சிட்டி ரெடி!” - கல்வியை தனியார்மயமாக்கும் த.வெ.க அரசு

`தனியார் பல்கலைக்கழகங்களை அதிகரிப்பதன் மூலம், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு நிகரான உள் கட்டமைப்பு, புதிய பாடப்பிரிவுகள், ஆராய்ச்சி உள்ளிட்டவை உருவாகும்’ என்று அரசு கூறுகிறது.
தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான நில வரம்பு அதிரடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. 2019-ம் ஆண்டு சட்டத்தின்படி, குறைந்தபட்சம் 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் தேவைப்பட்ட நிலையில், தற்போது பகுதிவாரியாக இந்த வரம்பு குறைக்கப்பட்டிருக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 12 ஏக்கரும், பிற மாநகராட்சிகள், நகராட்சிகளில் 18 ஏக்கரும், பிற பகுதிகளில் 25 ஏக்கரும் இருந்தால் தனியார் பல்கலைக்கழகம் தொடங்கலாம். இதற்கான சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
“100 ஏக்கர் என்ற நில வரம்பை 12, 18, 25 ஏக்கராகக் குறைப்பது உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கான நெருக்கடியைக் குறைக்கிறதா... அல்லது கல்வித்தரத்துக்கான கட்டுப்பாடுகளையும் தளர்த்துகிறதா... குறைந்த நிலப்பரப்பில் பல்கலைக்கழகத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த முடியுமா... புதிய தனியார் பல்கலைக்கழகங்களின் தரத்தை அரசு எவ்வாறு கண்காணிக்கப்போகிறது... அதை விட முக்கியமாக, இட ஒதுக்கீடு, கட்டணக் கட்டுப்பாடு, ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு ஆகியவற்றுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்?” - இப்படியான பல கேள்விகள் பொதுவெளியில் எழுந்திருக்கின்றன.
இது குறித்து கல்வியாளர் டாக்டர் காயத்ரியிடம் கேட்டபோது, “மாற்றம் வேண்டும் என்று விரும்பியவர்களுக்கே அதிர்ச்சியளிக்கும் வகையில் பல மாற்றங்கள் தமிழகத்தில் நிகழ்ந்து வருகின்றன. அவற்றில், சட்டமன்றத்தின் இறுதி நாளில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவும் ஒன்று. தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகி விட்டால், அதில் மத்திய, மாநில அரசுகளால் தலையிட முடியாத நிலை ஏற்படும். இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி, கல்வித்தரம், கல்வி உதவித்தொகை என எதுவும் முறையாக இருக்காது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு, உதவித்தொகை போன்றவற்றையும் எதிர்பார்க்க முடியாது.
`தனியார் பல்கலைக்கழகங்களை அதிகரிப்பதன் மூலம், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு நிகரான உள் கட்டமைப்பு, புதிய பாடப்பிரிவுகள், ஆராய்ச்சி உள்ளிட்டவை உருவாகும்’ என்று அரசு கூறுகிறது. அப்படியானால், ஏற்கெனவே அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்தவும், முழுநேர ஆசிரியர்களை நியமிக்கவும், புதிய ஆய்வுக் கூடங்களை அமைக்கவும், ஆராய்ச்சிக்கும் காப்புரிமைக்கும் உதவவும் ஏன் இதே அளவிலான கவனம் செலுத்தப்படவில்லை?
முனைவர் பட்டம் பெறுதல், புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுதல் போன்றவற்றிலும் அரசுப்பள்ளி மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் பங்கு தனியார் பல்கலைக்கழகங்களில் குறைவாகவே இருக்கும். அரசுப் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்துக்கான ஓராண்டுக் கட்டணம் அதிகபட்சம் ரூ.15,000 என்ற நிலையில், தனியார் பல்கலைக்கழகங்களில் கலை, அறிவியல் படிப்புகளுக்கே ரூ.40,000 முதல் ரூ.50,000 வரையும், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்தகைய கட்டணங்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், இட ஒதுக்கீட்டின் மூலம் உயர்கல்வி பெறும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மாணவர்களுக்கும் எட்டாக் கனியாகிவிடும். இதனால், உயர்கல்வி மட்டுமல்லாமல் ஆராய்ச்சித்துறையிலும் பின்தங்கிய பிரிவினரின் பங்கேற்பு குறையும் அபாயம் உள்ளது” என்றார்.
கல்வியாளர் ரமேஷ் பிரபாவிடம் பேசிய போது, “தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம், தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துவதை மறைமுகமாகச் செயல்படுத்துவதாக உள்ளது. இது போன்று கல்வி நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டால், இட ஒதுக்கீடு, கட்டணக் கட்டமைப்பு, ஆசிரியர்களின் பாதுகாப்பு ஆகியவை மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்கும் அபாயம் இருக்கிறது. தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு என்பது அடிப்படையான விஷயம். இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் இரண்டு லட்சம் இடங்கள் இருக்கும்போது, அவற்றில் 69 சதவிகிதத்்துக்குக் கீழ் சுமார் 1.3 லட்சம் முதல் 1.4 லட்சம் இடங்கள் வரை நம்முடைய பிள்ளைகளுக்குப் பாதுகாப்பாக இருக்கின்றன. அதில்தான் படித்து பலர் அமெரிக்காவுக்குச் சென்றிருக்கின்றனர்; பலர் இன்று சாஃப்ட்வேர் இன்ஜினீயர்களாக இருக்கின்றனர். அந்த அமைப்பையே காலி செய்துவிட்டால், இவை அனைத்தும் கேள்விக்குறியாகிவிடும்.
தரமான நிறுவனங்கள் வரும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வரும் என்பதெல்லாம் இதற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன. ஆனால், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் 100 ஏக்கர் இல்லாமல் ஒரு கேம்பஸையே உருவாக்காது. ஒரு பொறியியல் கல்லூரிக்கே விடுதி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகளைச் சேர்த்தால் நிலம் போதாமல் இருக்கிறது. பல்கலைக்கழகம் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சாதாரண கிராமப்புறப் பின்னணியிலிருந்து, குறிப்பாக வசதியில்லாத குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களின் எதிர்காலம், தனியார்மயமாக்கத்தால் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்கும்.
இந்தத் தனியார் பல்கலைக்கழகச் சட்டமே வேண்டாம் என்று சொல்ல முடியாது. இந்தச் சட்டத் திருத்தத்தில் அரசு தனது கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்; அரசு நிர்ணயிக்கும் கட்டணக் கட்டமைப்பு இருக்க வேண்டும். மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு, ஆசிரியர்களுக்கான சம்பளம், தகுதி என அனைத்து நிலைகளிலும் கட்டுப்பாடுகளையும் வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அரசு கொண்டுவர வேண்டும். 18 மாடி கொண்ட செங்குத்தான கட்டடமாக அமைத்தாலும் பரவாயில்லை; ஆனால், தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்க வேண்டும்” என்றார்.
100 ஏக்கர் 12 ஏக்கராகச் சுருங்கலாம்... கல்வியின் தரமும் சுருங்கிவிடக் கூடாது!

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)