Arts, culture, entertainment and media
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு திடீர் தட்டுப்பாடு: மதுப்பிரியர்கள் ஆவேசத்தால் சமூக ஆர்வலர்கள் கவலை
மாவட்டத்தில் 90க்கும் அதிகமான அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கு, கடலுார் மண்டல குடோனில் இருந்து லாரிகள் மூலம் மதுபானங்கள் வழங்கப்படுகிறது. தி.மு.க., போலவே, விஜய் ஆட்சியிலும் பாட்டிலுக்கு கூடுதல் விலை பெறப்பட்டது, பேசுபொருளாக மாறியது.
இதையடுத்து, ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசு, பாட்டிலுக்கு கூடுதலாக பணம் பெறுவதை தடுத்தனர். ஆனால், மதுபான பெட்டிகளை ஏற்றி இறக்கும் சுமைதுாக்கும் தொழிலாளர்களுக்கு கூலி தருவது யார் என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு விடை கிடைக்காத நிலையில், கடந்த மூன்று நாட்களாக மதுபானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மாவட்டத்தில் 20 டாஸ்மாக் கடைகள், மதுபானங்கள் இல்லாமல் தற்காலிமாக மூடப்பட்டன.
மதுபானங்கள் கிடைக்காததால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர்கள், ஆங்காங்கே உள்ள தனியார் மதுக்கூடங்களில் குவிந்தனர். இதனால் கட்டுக்கடங்காத கூட்டத்தை சமாளிக்க முடியாமல், தனியார் மதுபானக்கூட ஊழியர்களுடன் தகராறு ஏற்பட்டது.
குறிப்பாக, விருத்தாசலம் மணலுார், கடலுார் சாலைகளில் உள்ள பார்களில் கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்தன. ஷட்டர்களை உடைத்து, தகராறில் ஈடுபட்டதால், போலீசார் லேசான தடியடி நடத்தி கலைக்கும் நிலை ஏற்பட்டது.
மேலும், சாலை நடுவே வாகனங்களை நிறுத்திச் சென்றதால் பிரதான சாலைகளில் விபத்து அபாயம் அதிகரித்தது. இது பார்வையாளர்களை மட்டுமல்லாது பெண்கள், சமூக ஆர்வலர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஓரிரு நாட்கள் சரிவர கிடைக்காத நிலைக்கு, இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழும் நிலையில், பூரண மதுவிலக்கு சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எனவே, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைத்து, வளரும் தலைமுறையினரை பாதுகாக்கும் நடவடிக்கையை அரசு முன்னெடுக்க வேண்டும்.
மேலும், கடலுார் மட்டுமல்லாது விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய உட்கோட்ட தலைமையிடங்களில் போதை மீட்பு மையங்களை துவங்கி, மதுவால் சீரழியும் இளைஞர்கள், குடும்பத் தலைவர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.
மதுபானங்கள் தட்டுப்பாட்டை முன்கூட்டியே அறிந்த சிலர், தலா 10, 20 என குவாட்டர் பாட்டில்களை வாங்கி வைத்தனர். கூட்டமாக முண்டியடித்த இடங்களில் 100 முதல் 150 ரூபாய் கூடுதல் விலையில் விற்று கல்லா கட்டினர். மது அருந்தாமல் துாங்க முடியாது என்ற நிலையில் இருந்த பலரும், கூடுதல் விலையைப்பற்றி கவலையின்றி, மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றது அதிர்வலையை ஏற்படுத்தியது.