Politics
முதல்வர் விஜய் லண்டன் பயணத்தில் ரூ.15,300 கோடி முதலீடு ஈர்ப்பு:10 ஆயிரம் பேருக்கு வேலை

சென்னை: முதல்வர் விஜயின் லண்டன் பயணத்தின் வாயிலாக 15,300 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளன. இதனால், 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வர் விஜய் முன்னிலையில் நேற்று லண்டனில் தமிழக அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி நிறுவனத்திற்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.
சர்வதேச வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனம், இந்தியவில் தனது முதல் உற்பத்தி ஆலையை தமிழகத்தில் நிறுவவதற்கான விருப்ப கடிதத்தை வழங்கி உள்ளது.
தமிழகத்தில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து விஜயிடம் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், விருப்ப கடிதம் சேர்த்து 15,300 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்கப்பட்டுள்ளன. நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும்.
*சிக்மா டெக்னாலஜி குழுமம் மற்றும் எர்ன்ஸ்ட் யங் நிறுவனங்களுடன் திறன் மையங்களை விரிவுபடுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. இதன் வாயிலாக 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்தியாவில் மேற்கொள்ள உள்ள 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டிற்கு தமிழகத்தை விரும்பத்தக்க இடமாக கருதுவதாக விருப்ப கடிதம் அளித்துள்ளது.
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் தீரஜ் ஹிந்துஜா, பினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் பிரகாஷ் சாப்ரியா, இயக்குனர் ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா, ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் முதல்வர் விஜயை சந்தித்து பேசினர்.தமிழகத்தில் ஹிந்துஜா குழுமம் மேற்கொண்டுள்ள முதலீடுகள் குறித்து விஜயிடம் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.