Politics
“தொலைநோக்குப் பார்வையோடு இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது” - திருமாவளவன் எம்.பி. பேட்டி!

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில், தவெக ஆதரவு மற்றும் தோழமைக் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (09.09.2026) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட முக்கியக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் பங்கேற்றனர். அப்போது இந்த கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி எனப் பெயரிடப்பட்டு அதிகாரப்பூர்வ வெளியானது.
இதனையடுத்து திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “இதுவரை ஆதரவு கட்சிகளாக இருந்த நாங்கள், இன்று முதல் கூட்டணி கட்சிகளாக பரிணாமம் அடைந்திருக்கிறோம். முதலமைச்சர் விஜய் தலைமையில் கூடிய கலந்தாய்வுக் கூட்டத்தில், ஒருமனதாக கூட்டணியின் பெயர் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மையும் சமூக நீதியும் இந்த கூட்டணியின் முதன்மையான குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளாகும். ஆகவே, இந்த கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மதச்சார்பின்மையை தமிழ்நாட்டில் மட்டுமின்றி, அகில இந்திய அளவிலும் நாம் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. அந்தப் புரிதலோடு, தேசிய அளவில் இயங்கிக் கொண்டிருக்கிற காங்கிரஸ் பேரியக்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும், தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு இந்த கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். மதவாத சக்திகளுக்கும், சாதியவாத சக்திகளுக்கும் இந்த மண்ணில் இடமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான களத்தில் நாங்கள் கைகோர்த்திருக்கிறோம்.
தேர்தலுக்காக மட்டுமல்ல. இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என பொதுத்தேர்தலுக்கு முன்னதாக நாம் சில தேர்தல்களை சந்திக்க இருக்கிறோம். அந்தத் தேர்தல்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி இது அல்ல. மதச்சார்பின்மை, சமூகநீதி, சமதர்மம் போன்ற அரசமைப்புச் சட்டம் முன்மொழியும் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் தொலைநோக்குப் பார்வையோடு இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே, நாங்கள் இணைந்து அந்தக் கருத்தியல் களத்தில் தொடர்ந்து பயணிப்போம். இடையிலே வரும் தேர்தல்களையும் சந்திப்போம்; வெற்றி பெறுவோம்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)