Politics
தவெக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன? வெளியான முக்கிய தகவல்

முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த தவெக ஆதரவு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் இறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக, தனிப் பெரும்பான்மை பெறாததால், ஆட்சி அமைக்க திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவை நாடியது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து முதல் கட்சியாக காங்கிரஸ் வெளியேறி தவெக கூட்டணியில் இணைந்தது.
இதனைத் தொடர்ந்து, விசிக, ஐ.யு.எம்.எல். ஆகிய கட்சிகளும் தவெக கூட்டணியில் இணைந்து ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டும் வெளியில் இருந்து தங்களது ஆதரவை வழங்கின. இதன் மூலம், தவெக ஆட்சி அமைத்து பெரும்பான்மை நிரூபித்தது.
இதனைத் தொடர்ந்து கூட்டணியை வலுவாக்க தவெக கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தை சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவை புறக்கணித்த நிலையில், ஏனைய கட்சிகள் பங்கேற்றன.
இந்நிலையில், 2ஆம் கட்ட ஆலோசனைக் கூட்டத்தை வரும் 9ஆம் தேதி சென்னையில் உள்ள தவெக தலைமை அலுவலகமான பனையூரில் கூட்டியுள்ளது. இதில் பங்கேற்க தனது அமைச்சரவையில் இருக்கும் கட்சிகளுக்கும், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கும் தவெக அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். இதில், சிபிஐ மற்றும் சிபிஎம் பங்கேற்காது என அறிவித்துவிட்டன.
இதனைத் தொடர்ந்து இன்று முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர், எம்.பி. பிரவீன் சக்ரவர்த்தி, எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எம்.பி. துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விசிக தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுமார் 1.30 மணி நேரமாக நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் முடிவு செய்திருப்பதாகவும், அது குறித்தான அறிவிப்பை தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து அறிவிப்பார்கள் எனச் சொல்லப்படுகிறது. இந்த கூட்டணி பெயரில் ‘சமூகநீதி’ என்பது இடம் பெறும் எனவும் சொல்லப்படுகிறது.
மேலும், வரக்கூடிய உள்ளாட்சி முதல் நாடாளுமன்றத் தேர்தல்கள் வரை எப்படி எதிர்கொள்வது என்பதை குறித்து ஆலோசித்ததாகவும், கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு, கூட்டணியின் மையக்கருத்து உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
