Politics
“லண்டனில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து” - முதல்வர் விஜய் தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டனுக்குக் கடந்த 10ஆம் தேதி (10.09.2026) இரவு புறப்பட்டுச் சென்றார். இந்த அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு புதிய தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் விஜய்யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இங்கிலாந்து, லண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை அமைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ள இந்த மையம், சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட ஜிசிசி காரிடார் பகுதியில் அமைக்கப்படவுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)