Religion
திருக்கோவிலூர் பகுதி விநாயகர் சிலைகள் அரகண்டநல்லுார் ஏரியில் விசர்ஜனம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் , அரகண்டநல்லுார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அந்திலி அல்லித் தாமரை ஏரியில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருக்கோவிலுார் , மணம்பூண்டி, தேவனுார் , அரகண்டநல்லுார் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. விஷ்வஹிந்து பரிஷத் நிர்வாகி இராமமூர்த்தி தலைமையில், இந்து முன்னணி நிர்வாகிகளும் இணைந்து ஐந்து முனை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டு பகல் 2:30 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது.
ஹிந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர். கிழக்கு வீதி, ஏரிக்கரை மூலம், மேலவீதி, வடக்கு வீதி, பிடாரி அம்மன் கோவில் வீதி வழியாக ஊர்வலம் சென்றாலும், விநாயகர் சிலை பொறுப்பாளர்கள் சந்தப்பேட்டை, கீழையூர் என பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த 16 சிலைகள் உயர்மட்ட பாலத்தின் மீது சென்று விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டி, தேவனுார் கூட்டு சாலை, அரகண்டநல்லுார் வழியாக அந்திலி அல்லித் தாமரை ஏரியில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
திருக்கோவிலுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் சிலையை கரைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்தீபன் தலைமையில், இன்ஸ்பெக்டர் அன்பழகன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் அரகண்டநல்லுார் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.