Religion
விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள்
சிவகங்கை: விநாயகர் சதுர்த்திக்காக மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் குறிப்பிடும் நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை விஜர்சனம் செய்ய வேண்டும். சிலைகளை களிமண்ணால் செய்த, பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மா கோல் கலவை இல்லாத, சுற்றுச் சூழலை பாதிக்காத மூலப்பொருட்களை பயன்படுத்தி தயாரித்த சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும்.
சிலைகளுக்கு அலங்கரிக்கப்படும் ஆபரணங்கள் தயாரிக்க உலர்ந்த மலர், வைக்கோல் மட்டுமே பயன்படுத்தவும். சிலைகளை பளபளப்பாக்க மரங்களின் இயற்கை பிசின்களை மட்டுமே பயன்படுத்தவும். ஒரு முறை பயன்படுத்திய பிளாஸ்டிக், தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர்நிலைகளை மாசுபடுவதை தடுக்கும் விதமாக சிலைகளை தயாரிக்க வைக்கோல் உள்ளிட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வர்ணம் பூச நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக தவிர்க்கவும். சிலைகள் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயம் பூசவே கூடாது. நீர்சார்ந்த, மக்க கூடிய, நச்சு கலப்படமற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு பின் சிவகங்கையில் தெப்பக்குளம், மானாமதுரையில் ஆலங்குளம், இளையான்குடியில் சாலைகிராமம் ஊரணி, காரைக்குடியில் சிவன் கோயில் ஊரணி, சிங்கம்புணரி ஊரணி, தேவகோட்டையில் சிலம்பணி ஊரணி போன்ற நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை விஜர்சனம் செய்ய வேண்டும் என்றார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
