Politics
‘மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ – தவெக தலைமையில் அமைந்த புது கூட்டணி

தவெக தலைமையில் 'மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்ற புதிய கூட்டணி உருவானது.
சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக, கூட்டணி ஆட்சியை அமைத்தது. இதனைத் தொடர்ந்து கூட்டணியை வலுவாக்க தவெக கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தை சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவை புறக்கணித்த நிலையில், ஏனைய கட்சிகள் பங்கேற்றன.
இந்நிலையில், 2ஆம் கட்ட ஆலோசனைக் கூட்டத்தை இன்று (9ஆம் தேதி) சென்னையில் உள்ள தவெக தலைமை அலுவலகமான பனையூரில் கூடியது. முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர், எம்.பி. பிரவீன் சக்ரவர்த்தி, எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எம்.பி. துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விசிக தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுமார் 1.30 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணிக்கான பெயர் முடிவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வரக்கூடிய உள்ளாட்சி முதல் நாடாளுமன்றத் தேர்தல்கள் வரை எப்படி எதிர்கொள்வது என்பதை குறித்து ஆலோசித்ததாகவும், கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு, கூட்டணியின் மையக்கருத்து உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
