Politics
இந்தியா உள்பட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா: அமெரிக்க பார்லிமென்டில் நிறைவேற்றம்

வாஷிங்டன்: இந்தியா உள்பட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 262-159 என்ற ஓட்டு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.
ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கியதால் உலகளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து, ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை வழங்கி வருகிறது. இதனால், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. ரஷ்யாவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், அந்நாட்டின் எரிசக்தி துறையை குறிவைத்து அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முக்கிய நடைமுறை தடையை கடந்தது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக குடியரசு கட்சியினர் ஓட்டளித்த நிலையில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இரு எம்.பி.,க்களும் கட்சி நிலைப்பாட்டை மீறி ஆதரவாக ஓட்டளித்தனர்.இதையடுத்து, பெரும்பான்மை பலத்துடன் மசோதா அடுத்த கட்டத்துக்கு முன்னேறியது. இதன் மீதான இறுதி ஓட்டெடுப்பு பிரதிநிதிகள் சபையில் இன்று நடந்தது.
இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் 262-159 என்ற ஓட்டு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. பல மாத தாமதத்திற்குப் பிறகு இந்த சட்டம் ஒப்புதலுக்காக அதிபர் டிரம்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை, அமெரிக்க செனட் சபை கடந்த மாதம் ஏற்கனவே நிறைவேற்றி உள்ளது. அங்கு, 86 பேர் ஆதரவாகவும், 11 பேர் எதிராகவும் ஓட்டளித்தனர். பிரதிநிதி கள் சபையில் ஜனநாயகக் கட்சி எம்.பி., ஸ்டெனி ஹோயர் இந்த மசோதாவில் ஒரு திருத்தத்தை கொண்டு வந்தார்.
அதில், இந்தியா உட்பட ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும், 10 நாடுகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளுக்கு, மசோதாவில் இடம்பெற்றுள்ள இரண்டாம் நிலை வரி விதிப்பு பிரிவின் கீழ், அதிகபட்சம், 100 சதவீதம் வரை வரி விதிக்க முடியும். இந்த பட்டியலில் சீனா, துருக்கி, அஜர்பைஜான், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு, 100 சதவீத வரி விதிக்கப்படும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.