Politics
இந்தியா உட்பட 5 நாடுகள் மீது 100% வரி விதிக்கும் மசோதா; அமெரிக்காவில் நாளை இறுதி ஓட்டெடுப்பு

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உட்பட 5 நாடுகள் மீது 100% இறக்குமதி வரி விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் நாளை இறுதி ஓட்டெடுப்பு நடக்கிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர், ஐந்தாவது ஆண்டாக தொடர்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் மசோதா, அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
மசோதாவுக்கு ஆதரவாக 86 பேரும், எதிர்த்து 11 பேரும் ஓட்டளித்தனர். இரண்டு நோக்கங்களை ஒருங்கிணைக்கும் வகையில், இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்று, ரஷ்யா மீது நேரடி தடை விதிப்பது. மற்றொன்று, ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து அதன் பொருளாதாரத்துக்கு உதவுவதன் வாயிலாக, உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதியுதவி செய்யும் நாடுகளை தண்டிப்பது.
இதன் அடிப்படையில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் உலகின் முதல் ஐந்து நாடுகளின் ஏற்றுமதி பொருட்களுக்கு, 100 சதவீதம் சுங்க வரி விதிக்க இம்மசோதா அதிகாரம் அளிக்கிறது. தற்போது, இந்த வரி விதிப்பு பட்டியலில் இந்தியா, சீனா, அஜர்பைஜான், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு, 100 சதவீத வரி விதிக்கப்படும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
கடந்த மாதம் நிறைவேற்றப்ப இந்த மசோதா மீது அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் நாளை இறுதி ஓட்டெடுப்பு நடக்கிறது. அங்கு நிறைவேற்றப்பட்ட பின், இறுதியாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.