Politics
இந்தியா, சீனாவிற்கு செக் வைத்த அமெரிக்கா; என்ன செய்யப்போகிறது ரஷ்யா?

ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவைக் கொள்முதல் செய்யும் நாடுகள் மீது 100% வரை கூடுதல் வரி விதிக்க, அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா, அமெரிக்கப் பிரதிநிதிகள் (செனட்) சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
'லின்ட்சே ஓ கிரகாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடை சட்டம் 2026' என்று அழைக்கப்படும் இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில், 262-159 என்ற கணக்கில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இது ரஷ்யாவின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த மசோதா, ரஷ்யாவிடம் அதிக அளவில் எரிபொருள் கொள்முதல் செய்யும் முதல் 5 நாடுகள் மீது 100% வரி விதிக்கும் அதிகாரத்தை அதிபருக்கு வழங்குகிறது. ரஷ்யாவின் பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாலேயே 100 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்துவிட்டதாகப் பொருளில்லை. ஆனாலும், அதைச் சட்டமாக்குவதற்கான அனைத்து அதிகாரமும் அதிபருக்கு உள்ளது.
தற்போது, இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் அதில் கடுமையாக பாதிக்கப்படுவது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளாகும். எனவே, இந்த மசோதா மூலமாக அமெரிக்கா இந்த இரு முக்கிய நாடுகளுக்கும் செக் வைத்துள்ளது. அதே நேரத்தில், இந்த மசோதா ஈரான் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கிறது. ஏற்கனவே, பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட தலைவர்கள் பல்வேறு முடிவுகள் குறித்து ஆலோசித்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் இந்த மசோதா என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)