Religion
நீரில் கரையக்கூடிய விநாயகர் சிலைக்கு அனுமதி! ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடந்தது. சப் – கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் வாசுதேவன், போலீசார், அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
விநாயகர் சிலைகள் துாய களிமண்ணால் தயாரிக்கப்பட வேண்டும். ‘பிளாஸ்ட் ஆப் பாரீஸ்’ தடை செய்யப்பட்ட வண்ணங்கள் பூசப்பட்ட சிலைகள் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சிலைகள் தயாரிக்க கூடாது. நீரில் எளிதில் கரையக்கூடிய நச்சு அல்லாத இயற்கை வண்ணங்களை பயன்படுத்த வேண்டும்.
பந்தல் அமைக்க தீப்பற்ற கூடிய பொருட்களை பயன்படுத்த கூடாது. அங்கு முதலுதவி மற்றும் அவசர கால மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சிலைகளின் உயரம் தரை தளத்தில் இருந்து, 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பூஜை நேரங்களில் காலை, மாலையில் தலா இரண்டு மணி நேரம் மட்டுமே ஒலி பெருக்கி பயன்படுத்த வேண்டும். கூம்பு வகை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது.
விநாயகர் சிலை நிறுவப்பட்ட நாளில் இருந்து, ஐந்து நாட்களுக்குள் கரைப்பதற்காக அவ்விடத்தில் இருந்து எடுக்க வேண்டும். காவல்துறையினரால் நிர்ணயிக்கப்பட்ட பாதைகளில் குறிப்பிட்ட நாட்களில் வாகனத்தில் சிலையை எடுத்த செல்ல வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
* வால்பாறையில் வரும், 20 தேதி பல்வேறு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்திற்காக சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பாக கொண்டுவரப்படுகிறது. விசர்ஜன ஊர்வலம் பாதுகாப்பு குறித்து, தாசில்தார் அரசகுமார் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே சிலைகள் வைக்க வேண்டும். புதியதாக சிலைகள் வைக்க அனுமதியில்லை. அமைதியான முறையில் விசர்ஜன ஊர்வலம் நடைபெற ஒத்துழைக்க வேண்டும், என, வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் செல்வம், நகராட்சி மேலாளர் செந்தில்முருகன் மற்றும் ஹிந்து முன்னனி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.