Politics
“எதிர்க்கட்சியினரை போல் நானும் அந்த அரசியலை செய்ய விரும்பவில்லை” - முதல்வர் விஜய் காட்டம்!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 3ஆம் தேதி முதல்வர் விஜய் தாக்கல் செய்த காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு இன்று (07-09-26) முதல்வர் விஜய் பதிலளித்தார். அப்போது அவர், “சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த அமுதன் கொலை மற்றும் சென்னை திருவற்றியூரில் நடந்த தனுஷ்குமார் கொலை போன்ற சில கொலை சம்பவங்கள் குறித்த பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஒரு மாணவன் உயிரிழப்பது என்பது மிகவும் வேதனையான சம்பவம். அந்த மாணவனை இழந்த பெற்றோரின் மன வேதனையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நிகழ்வில் குற்றத்தில் ஈடுபட்ட 36 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம் தனது கடமையை சமரசம் இன்றி செய்து வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை வழங்கப்படும். ஆனால் தண்டனை வழங்குவது மட்டுமே இந்த அரசின் நோக்கம் அல்ல. மாணவர்கள் குற்றத்தில் ஈடுபடாத வகையில் அவர்களை வழிநடத்தவும், அவர்களது குடும்பங்களோடு இணைந்து செயல்படுவதும் நமது பொறுப்பாகும். ஒரு குழந்தை குற்றவாளியாக வேண்டும் என்று எந்த பெற்றோரும் விரும்புவதில்லை.
ஆனால், சமூக சூழல், குடும்பத்திலிருந்து கிடைக்கும் அரவணைப்பு இல்லாமை, தவறான நட்பு, சமூக ஊடகங்களின் தாக்கம், போதை பொருள் பயன்பாடு, சரியான புரிதலும் பக்குவமும் இன்றி எல்லாவற்றிலும் தன்னை ஒரு பெரிய பிம்பமாக முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற மனநிலை, சட்ட அறிவின்மை மற்றும் இதனால் குடும்பத்தினரின் மன வேதனை பற்றி அறியாதது போன்ற பல்வேறு காரணங்களால், இளம் வயதினர் குற்ற செயல்களில் ஈடுபடும் சூழல் உருவாகி உள்ளது. இதற்கெல்லாம் யார் காரணம்? இந்த நிகழ்வுகளை பொறுத்தவரை யார் மீது பழி போடலாம் என்று அரசியல் ரீதியாக சிந்திக்கும் எதிர்கட்சியினருக்கு இணையாக நானும் 2021 முதல் 2025 வரை நடைபெற்ற குற்ற சம்பவங்களை டேட்டாவுடன் கூறிவிட்டு ஒதுங்க மனம் இடம் தரவில்லை. அதுபோன்ற கீழான அரசியலை நாம் செய்வதும் இல்லை, செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு மாணவனை அடிக்கும் பொழுது அந்த மாணவனை தாக்கும் பிற மாணவர்கள் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாத அளவிற்கு உருவாகி இருக்கிறார்கள் என்பதை உளவியல் ரீதியாக நாம் மறுக்கின்றோம்.
போதை கலாச்சாரம் என்ற ஒற்றை வார்த்தையை கூறி ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தையும் குறை கூறிவிட்டு நாம் தப்பித்துக் கொள்வது ஒரு சிறந்த தலைமை பண்பு அல்ல. அதை நமது அரசு செய்யாது. இது போன்ற சம்பவங்களால் மாணவனின் உயிர் போனது மட்டுமில்லாமல் அதில் சம்பந்தப்பட்ட அனைவரின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாகிவிடுவதோடு ஏன் அனைவரின் குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மாணவர்கள் உணரவில்லை எனில் அவர்களுக்கு சரியான பாதை இதுவரை வகுத்து தரப்படவில்லை என்பதுதான் உண்மை. இதற்கும் 100 நாட்களான இந்த அரசா காரணம்? தாக்கப்பட்ட மற்றும் தாக்கிய மாணவர்களின் அண்ணனாக அவர்களின் பொறுப்பான குடும்ப உறவாக இருந்து சிந்தித்து பார்க்கிறேன். எனவே இத்தகைய நிகழ்வுகளை மேம்போக்காக எதிர்கொண்டு மாணவர்களை போதை கலாச்சாரம் என்று ஒற்றை வார்த்தையில் கொச்சைப்படுத்தி ஒதுங்காமல் அனைத்து குடும்பங்களில் ஒருவனாக இருந்தும் உளவியல் ரீதியாகவும் பொறுப்புடனும் சிந்தித்து மாணவர் சமுதாயத்தை சரியான பாதைக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு எடுக்கும் என்பதை உறுப்பினர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நான் பதவியற்ற முதல் நாளே தமிழ்நாட்டு மக்களுக்கு ஊழலற்ற, வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை வழங்குவதை இந்த அரசின் முதன்மையான நோக்கம் என்று தெளிவாக உறுதியாக கூறியுள்ளேன். தமிழ்நாட்டில் ஊழலை தடுப்பதிலும், லஞ்சத்தை ஒழிப்பதிலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை மிக முக்கியமான பங்காற்றி வருகிறது. நமது அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது குடும்பத்தையும், தனிப்பட்ட சுகங்களையும் மறந்து அரசு பணியை முழு அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர். அவர்களின் நேர்மையையும், அர்ப்பணிப்பையும் இந்த அரசு மதிக்கிறது, அவர்களுக்கு தலை வணங்குகிறது. அதே நேரத்தில் ஒரு சிலர் தங்களது தனிப்பட்ட சுயலாபத்திற்காக லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசு பணியில் இருக்கும் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவரது பெயர் நாளிதழ்களிகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகும்போது அந்த செய்தி அவரை மட்டுமல்ல அவரது குடும்பத்தினரையும் ஆழமாக பாதிக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட அரசு ஊழியரும் அவரது குடும்பத்தினரும் சிந்திக்க வேண்டும்.
எனவே அரசு ஊழியர்கள் தங்களது பணியில் நேர்மையாகவும், கடமை உணர்வையும் கடைபிடித்து தங்களுக்கும் தங்களது குடும்பத்திற்கும் எந்தவித அவப்பெயரும் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு அதே நேரத்தில் ஊழல் தடுப்பு அமைப்புகள் தங்களது சட்டப்பூர்வமான கடமையை எந்தவித தயக்கமும் இன்றி தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்த அரசு எந்தவித சமரசத்தையும் செய்யாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஊழல் தடுப்பு அமைப்புகள் தங்களது சட்டப்பூர்வமான கடமையை எந்தவித தயக்கமும் இன்றி தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதை பொருள் கலாச்சாரம் கடந்த ஆட்சியாளர்களால் கவனிப்பாரற்று இருந்ததால் ஆழமாக வேரூன்றி மரமாக வளர்ந்து நிற்கிறது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய சமூக பிரச்சனையாகவும் இருந்து வருகிறது. இளைஞர்களிடையே பீர் பிரஷர், வேலைவாய்ப்பின்மை, குடும்ப கண்காணிப்பு குறைதல், குற்ற வலையமைப்புகளில் தாக்கம் போன்றவை போதை பொருள் பயன்பாட்டிற்கு காரணமாகின்றன. போதை பொருள் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்த அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இதற்காக போதை பொருள் தடுப்பு படை தனியாக அமைக்கப்பட்டு இதுவரை போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதை என்கிற மரத்தின் ஒரு சில கிளைகளை தான் வெட்டி இருக்கிறோம். ஆனால் போதை என்கிற முழு மரத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும். அது ஒரு நாளிலோ, 100 நாட்களிலோ முடியும் பணி அல்ல. அதற்காக மாநிலத்தின் 37 மாவட்டங்கள் மற்றும் 9 மாநகரங்களில் 65 போதை பொருள் தடுப்பு படைகள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து உறுப்பினர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். இரண்டு பெண் தலைவர்களை கொள்கை தலைவர்களாக கொண்ட ஒரே அரசு நமது தமிழக வெற்றிக் கழக அரசு. பெண்களை தாயாக, அக்காவாக, தங்கையாக, தோழியாக பார்க்கக்கூடிய அரசு இது. பெண்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழக்கூடிய சமூகத்தை உருவாக்குவது இந்த அரசின் மிக முக்கியமான பொறுப்பாகும். பாலின சமத்துவமின்மை குடும்ப மற்றும் சமூக பாதுகாப்பில் ஏற்படும் குறைபாடுகள், இணையத்தின் தவறான பயன்பாடு, குடும்ப தகராறு, காதல் மற்றும் திருமணம் தொடர்பான பிரச்சனைகள், சமூக அழுத்தம் மற்றும் போதை கலாச்சாரம் போன்ற பல்வேறு காரணிகள் பெண்கள் மற்றும் பெண் குழந்தை குற்றங்களுக்கான பின்னணியாக உள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக எந்தவிதமான குற்றம் நடைபெற்றாலும் குற்றவாளிகள் மீது சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் குற்றம் நடைபெற்ற பின்னர் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் குற்றம் நடைபெறுவதற்கு முன்பே தடுப்பதே இந்த அரசின் நோக்கமாகும். இதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை மையமாக கொண்டு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
உறுப்பினர்கள் பேசியபோது காவல் மரணங்கள் குறித்து தெரிவித்திருந்தனர். காவல் நிலையத்தில் ஓர் உயிரிழப்பு ஏற்படுவது என்பது சாதாரணமான ஒரு நிகழ்வு அல்ல. அது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல காவல் துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையும் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினையாகும். எனவே காவலில் எந்த ஒரு மரணம் ஏற்பட்டாலும் அதன் காரணம் குறித்து வெளிப்படையான பாரபட்சமற்ற மற்றும் சட்டபடி உரிய விசாரணை நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி காவல் மரணம் தொடர்பான தகவல்கள் உரிய காலத்திற்குள் தெரிவிக்கப்படுவதோடு, தேவையான மருத்துவ உடற்கூறாய்வு மற்றும் மேஜிஸ்ட்ரேட் விசாரணை நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு காவலர் தவறு செய்திருந்தால் அவர் காவல் துறையை சேர்ந்தவர் என்பதற்காக எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை. தவறு செய்தவர் யாராக இருந்தாலும், சட்டம் தனது கடமையை சரிவர செய்து வருகிறது. காவல் நிலைய மரணங்களை முற்றிலும் தவிர்க்கும் நோக்கில் சிசிடிவி கண்காணிப்பு பயிற்சி, மருத்துவ பரிசோதனை, தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் பொறுப்பு கூறல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் வழுப்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)





