Religion
விநாயகர் சிலை வழிபாடு ‘சி.சி.டி.வி’ கட்டாயம்
மாமல்லபுரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை பாதுகாக்க ‘சி.சி.டி.வி’ அமைக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
மாமல்லபுரம் காவல் உட்கோட்டத்தில், மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட காவல் நிலையங்கள் உள்ளன. இப்பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னனி உள்ளிட்ட அமைப்பினர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவர்.
இதுதொடர்பாக, மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி., அறிவழகன் தலைமையில் மாமல்லபுரத்தில், சிலை அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்ததது.
இந்த கூட்டத்தில் போலீஸ் டி.எஸ்.பி., அறிவழகன் பேசியதாவது:
கடந்தாண்டு விநாயகர் சிலைகளை வைத்த இடங்களில் மட்டுமே, சிலை வைக்க வேண்டும். புதிய இடத்தில் வைக்க அனுமதி கிடையாது. பொது இடங்களில் சிலைகளை வைப்பதற்கு முன், வருவாய் துறை, தீயணைப்பு நிலையம் மற்றும் காவல்துறையினரிடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். 10 அடி உயர சிலைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைக்கு அனுமதி இல்லை.
சிலை வைக்கப்படும் இடத்தில் கொட்டகை அமைத்து, சிலை பாதுகாப்பிற்கு ‘சி.சி.டி.வி’க்கள் அமைக்க வேண்டும்.
அதேபோல் சிலைகளை கரைப்பதற்கு போலீசார் அனுமதிக்கும் வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.