Politics
40 ஆண்டுகால பழைய நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தமா?- போட்டு உடைக்கும் வழக்கறிஞர் துரை அருண்

தமிழக முதலமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் ஆகியவை எப்போதுமே அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறும். தற்போதைய சூழலில், லண்டன் பயணத்தின் மூலம் தமிழகத்திற்குப் புதிய வேலைவாய்ப்புகளும் முதலீடுகளும் வந்துள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், அந்த ஒப்பந்தங்களின் உண்மைத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகளும் சட்ட வல்லுநர்களும் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் துரை அருண் நக்கீரன் டிவிக்கு கொடுத்த நேர்காணலில் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது,"முதலமைச்சர் லண்டன் பயணம் சென்று புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்து வருவதாக அரசுத் தரப்பில் பல்வேறு செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் முன்னணி ஊடகங்களே 'ரகசியம் பரம ரகசியம்' என்று இவருடைய வெளிநாட்டுப் பயணத்தின் வெளிப்படை தன்மையற்ற தன்மையைக் விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளன.
பொதுவாக, ஒரு முதலமைச்சர் வெளிநாடு செல்கிறார் என்றால் அவரது பயணத் திட்டம் முன்னரே அறிவிக்கப்படும். ஆனால் இவரோ விமானம் ஏறுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் லண்டன் செல்லும் அறிவிப்பையே வெளியிடுகிறார். போட்டிகள் நிறைந்த உலகம் என்பதால் ரகசியம் காப்பதாகச் சொல்வது 'ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல்' என்ற பழமொழிக்கு ஒப்பான ஏமாற்று வேலை. இந்த ஐந்து நாள் பயணத்தில் ஒரே ஒரு நிறுவனத்துடன் மட்டுமே பேசப்பட்டதாகத் தரவுகள் வருகின்றன. அரசு தரப்பில் பெருமையாகக் கூறப்படும் 'சம்வர்தனா மதர்சன்' குழுமத்துடனான ஒப்பந்தம் ஒரு மிகப்பெரிய பித்தலாட்டம்.
இந்த நிறுவனம் 1983-ஆம் ஆண்டிலிருந்தே இந்தியாவில் மாருதி கார்களுக்குத் தேவையான உதிரிபாகங்களைச் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் செயல்பட்டு வரும் ஒரு பழைய நிறுவனத்தை, ஏதோ லண்டனில் புதிதாகக் கண்டுபிடித்து ஒப்பந்தம் போட்டுள்ளதாகக் கூறுவது மக்களை முட்டாளாக்கும் செயலாகும். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றபோது லண்டன், ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்குச் சென்று ஹிந்துஜா, பிரிட்டானியா, வில்சன் பவர், அல்ட்ரா ஜெனகா போன்ற உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து 5,516 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 17,600-க்கும் மேற்பட்ட நிஜமான வேலைவாய்ப்புகளை உருவாக்கினார்.
அந்தத் தரவுகள் அனைத்தும் பொதுவெளியில் ஆதாரங்களுடன் இருக்கின்றன. ஆனால், தற்போதைய அரசு 100 நாட்களில் 1 லட்சம் கோடி முதலீடு ஈர்த்ததாக வெற்றுப் புள்ளிவிவரங்களைக் கூறுகிறது. 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என்று சொன்னார்களே, அது எந்தெந்த ஊர்களில் மூடப்பட்டது என்ற விவரம் பொதுவெளியில் இருக்கிறதா?. முன்பக்கக் கதவை மூடிவிட்டுப் பின்பக்கக் கதவைத் திறந்து வைப்பதைப் போலத்தான் இந்த அரசின் புள்ளிவிவரங்களும் முதலீட்டு ஒப்பந்தங்களும் இருக்கின்றன. எனவே, இந்த லண்டன் பயணம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளைத் தராமல், வெறும் மாயையான பலூனை ஊதிப் பெருக்குவது போன்ற ஒரு ரீல்ஸ் நாடகமே" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)