Politics
தமிழகத்தில் ரூ.12,000 கோடி தொழில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை: லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் முன்னிலையில், பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தொழிலை விரிவாக்கம் செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
'சம்வர்த்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட்' நிறுவனம், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து, வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு, தளவாட வசதிகள் ஆகிய துறைகளில், தமிழகத்தில் 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இதன் வாயிலாக, 7,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.
புதிய வேலை வாய்ப்பு இதற்காக, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன், சம்வர்த்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில், முதல்வர் விஜய் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
சம்வர்த்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்துதல் மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவர் பாரி பெயிண்டர், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவன நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் ஆகியோர், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில், 300 கோடி ரூபாயில் 400 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், 'வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்துடன், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
முதல்வர் விஜய் முன்னிலையில், வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவன குழும தொழில்நுட்ப இயக்குநர் ஹரி கிருஷ்ணா மலேபதி, நிதியியல் இயக்குநர் டென்னிஸ் சோர்பி, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவன இயக்குநர் தீபக் ஜேக்கப் ஆகியோர் கையெழுத்திட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.
தமிழகத்தில் உலகளாவிய திறன் மையம் அமைப்பதற்காக, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம், 'எர்ன்ஸ்ட் அண்டு யங்' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த மையம், 1,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2,000க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில், சென்னை மவுன்ட் - பூந்தமல்லி சாலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட ஜி.சி.சி., காரிடர் பகுதியில் அமைய உள்ளது.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழகத்தில் 'எம்பெடட் சிஸ்டம்ஸ்' மின்மயமாக்கல், டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில், 600 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், திருச்சி, சென்னையில் உள்ள, தன் உலகளாவிய திறன் மையங்களை விரிவாக்கம் செய்ய உள்ளது.
வழிகாட்டி நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த 'ஸ்ரியா சொல்யூஷன்ஸ்' நிறுவனம் வாயிலாக, திறன் மையங்களை விரிவாக்கம் செய்வதற்கு, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
முதல்வர் விஜய் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குழும நிறுவனர் மைக்கேல் கார்ல்சன், தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவன நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில், பிரிட்டன் நாட்டிற்கான இந்திய துாதர் குமரன் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.