Lifestyle and human interest
ரூ.3,383 கோடிக்கு சொத்து இருந்தும் மும்பை பா.ஜ.க எம்.எல்.ஏ. தெருக்களில் யாசகம் கேட்டு சென்றது ஏன்?
The sight of a BJP MLA begging on the streets of Mumbai, despite possessing assets worth ₹3,383 crore, has caused a stir.

ரூ.3383 கோடிக்கு சொத்து இருந்தும் பா.ஜ.க எம்.எல்.ஏ.ஒருவர் மும்பை தெருக்களில் யாசகம் எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மும்பை காட்கோபர் கிழக்கு பகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பராக் ஷா. மகாராஷ்டிராவில் உள்ள பணக்கார எம்.எல்.ஏ.க்களில் ஒருவராக கருதப்படும் பராக் ஷாவிற்கு ரூ.3,383 கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது. ஏராளமான கார்கள், ஆடம்பர பங்களா என சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும், சமீபத்தில் தனது பாதுகாப்பு, வாகனம் மற்றும் விலையுயர்ந்த உடைமைகளை விட்டுவிட்டு காட்கோபர் தெருக்களில் யாசகம் கேட்பவர் போல் பல மணி நேரத்தை கழித்தார்.
இந்த அசாதாரண அனுபவம் தனக்கு 'வாழ்க்கையின் யதார்த்தத்தை' புரிய வைத்ததாக தெரிவித்துள்ளார்.
காட்கோபர் கிழக்கு பா.ஜ.க எம்எல்ஏ யாசகர் வேடத்தில் இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜைன மத குரு நம்முனியின் ஆலோசனையின் பேரில் ஷா இந்த விஷயத்தை மேற்கொண்டார்.
மக்கள் தன்னை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்க அவர் ஒப்பனை செய்து கொண்டார், பின்னர் யாசகம் கேட்டு காட்கோபர் தெருக்களை சுற்றி வந்தார்.
யாசகம் கேட்பராக தெருக்களில் சுற்றிய அனுபவம் குறித்து ஷா கூறுகையில், ''ஒரு நபரின் சமூக நிலை தெரியாதபோது மக்களின் நடத்தை எவ்வாறு மாறுகிறது என்ற அனுபவம் எனக்கு ஏற்பட்டது. மரியாதையுடன் என்னை சந்திக்க வரிசையில் நிற்கும் அதே மக்களிடம் நான் செல்லும்போது, என்னை விட உயரமாகிறார்கள். எனவே, அதுதான் வாழ்க்கையின் யதார்த்தம்," என்று அவர் கூறினார்.
அவர் தெருக்களில் இருந்தபோது, சாதாரண மும்பை மக்களின் பெருந்தன்மையை கண்டதாக ஷா கூறினார். ஒரு நபர் அவரிடம் ரூ. 20 கொடுத்து உணவு உண்ணும்படி கேட்டுக்கொண்டார். அதேசமயம் ஷா தன்னிடம் எதுவும் இல்லை என்று கூறிய பிறகு சமோசா விற்பனையாளர் பணம் எதுவும் வாங்காமல் அவருக்கு உணவு கொடுத்தார் என்பதையும் தெரிவித்தார்.
யாசகம் கேட்பது மட்டுமின்றி, கிடைத்த உணவையும் சாப்பிட்டுவிட்டு, யாசகம் கேட்பவர் வேடத்தில் சாலையோரம் அமர்ந்திருந்தார் எம்எல்ஏ. பின்னர் அவர் தனது குரு மற்றும் பிறரிடம் அந்த அனுபவத்தைச் பகிர்ந்து கொண்டார். மேக்கப்பை அகற்றிய பிறகு, ஷா ஏற்கனவே யாசகம் கேட்டு சென்ற அதே இடங்களுக்கு மீண்டும் சென்றதாகவும், யாசகம் கேட்டு மாறுவேடமிட்டு அவர் சந்தித்த நபர்களை மீண்டும் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
ஷாவின் இந்த அசாதாரண சோதனையானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 2024ம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான அவரது பிரமாணப் பத்திரத்தில், அவர் தன்னிடம் மொத்த சொத்து ரூ. 3,383 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். அந்த நேரத்தில் அவர் மாநிலத்தின் பணக்கார வேட்பாளராக இருந்தார். பராக் ஷா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.!
