Lifestyle and human interest
பாஜகவின் பணக்கார எம்.எல்.ஏ; பிச்சைக்காரராக மாறிய தருணம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் மிகவும் பணக்கார சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் பராக் ஷா. பாஜகவைச் சேர்ந்த இவர், தற்போது வீதிகளில் வருவோரிடம் பிச்சை கேட்கும் யாசகராக மாறியுள்ளார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
காட்கோபர் (கிழக்கு) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான இவர், கிட்டதட்ட ரூ.5,000 கோடி சொத்து மதிப்பு கொண்டவர் எனக் கூறப்படுகிறது. ஜெயின் மத மரபில் சிறப்பு மாதமாகக் கருதப்படும் இக்காலகட்டத்தில், தனது ஆன்மீக குருவின் அறிவுறுத்தலின்படி இவர் இந்த விசித்திர முயற்சியை மேற்கொண்டார்.
அதன்படி, கடந்த செப்டம்பர் 14 அன்று தனது பாதுகாப்பு அதிகாரிகள், ஆடம்பர கார்கள் உள்ளிட்டவற்றைத் துறந்து, பிச்சைக்காரரைப்போல வேடமிட்ட அவர், சில மணி நேரம் மும்பை நகரின் வீதிகளில் இறங்கி, அவ்வழியே செல்லும் மனிதர்களிடம் பிச்சை எடுத்தார். அப்போது, யாசகத்தின் மூலமாகக் கிடைத்த உணவையும் அவர் உட்கொண்டார். இது குறித்து அவர் பேசுகையில், ”சமூகத்தில் நமது அந்தஸ்து என்ன என்று தெரியாத போது மனிதர்கள் நம்மிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை இது எனக்கு உணர்த்துகிறது.
நமக்குக் கிடைக்கும் அனைத்து மரியாதைகளும் நம் பதவி மற்றும் அந்தஸ்துக்காக மட்டுமே கிடைக்கிறது. பிச்சைக்காரர் வேடத்தில் இருந்தபோது, வழக்கமாக என்னைச் சந்திக்க வரிசையில் வந்த அதே மனிதர்கள், என்னைவிட தங்களை உயர்ந்தவர்களாக உணர்ந்தனர். இதுவே வாழ்க்கையின் கசப்பான உண்மை” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”நான் பிச்சை எடுத்த போது ஒரு நபர் என்னிடம் ரூ.20 கொடுத்துப் போய் சாப்பிடு பாபா என்று கூறினார். மற்றொரு சமோசா வியாபாரி, தன்னிடம் பணம் இல்லை என்று கூறி எனக்குச் சாப்பிடுவதற்கு சமோசா கொடுத்தார். மும்பை நகரம் என்பது, மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய எப்போதும் தயாராக இருக்கும் ஒரு நகரம் என்பதை இந்த அனுபவம் எனக்கு உணர்த்தியது” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)