Politics
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் காங்., வேட்பாளர் அறிவிப்பு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் காங்., வேட்பாளராக விநாயகம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி, தட்டாஞ்சாவடி பொது தேர்தலில், கடந்த முறை த.வெ.க., கூட்டணியில், நேயம் மக்கள் கழகம் சார்பில், அதன் பொதுச்செயலாளர் விநாயகம் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார். அவர் மீண்டும் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட நேயம் மக்கம் கழக தலைவர் நேரு எம்.எல்.ஏ., முயற்சி மேற்கொண்டு, த.வெ.க., கூட்டணியில் தற்போதுள்ள அனைத்து கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், விநாயகம் காங்., தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன்னிலையில், காங்., கட்சியில் இணைந்தார். இதற்கிடையே தமிழகத்தில் த.வெ.க., ஆட்சிக்கு ஆதரவளிக்கும் இந்திய கம்யூ., சார்பில் அதன் மாநில செயலாளர் சலீம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், த.வெ.க., யாருக்கு ஆதரவளிக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது.
இந்நிலையில் நேற்று காலை காங்., தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, நேயம் மக்கள் கழக தலைவர் நேரு எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திகேயன், ராமு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், வைத்தியநாதன், சாமிநாதன் உள்ளிட்டோர், தமிழக அமைச்சரும், த.வெ.க., பொதுச் செயலாளருமான புஸ்சி ஆனந்தை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், சந்தித்து ஆதரவு கேட்டு கடிதம் அளித்தனர்.
பின், புஸ்சி ஆனந்த், வைத்திலிங்கத்திடம் இடைத்தேர்தலில் காங்., வேட்பாளரை ஆதரித்து த.வெ.க., நிர்வாகிகள் பணியில் ஈடுபடுவார்கள் என, உறுதியளித்ததாக, காங்., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், காங்., வேட்பாளராக விநாயகம் நிறுத்தப்படுவதாக, நேற்று மதியம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது.
இது குறித்து காங்., அகில இந்திய பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை, ‘தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக விநயாகத்தை அகில இந்திய காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பரிந்துரைத்துள்ளதாக’ தெரிவித்துள்ளார்.