Religion
5 அடி உயரத்திற்கு மேல் விநாயகர் சிலை வைக்க அனுமதி தேவை ஆர்.டி.ஓ., அறிவுரை
கடலுார்: விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கடலுாரில் நடந்தது.
கூட்டத்தில், கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி தாலுகாக்களை சேர்ந்த வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள், இந்து முன்னணியினர், விநாயகர் சிலை வைப்போர், விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஆர்.டி.ஓ., சுந்தரராஜன் பேசுகையில், ‘விநாயகர் சிலைகள் களிமண் மற்றும் காகித கூழ் ஆகியவற்றை கொண்டு மட்டுமே தயாரிக்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தக் கூடாது. ரசாயன வர்ணம் பூசக் கூடாது. 5 அடி உயரத்திற்கு மேல் விநாயகர் சிலை வைக்க போலீசில் முன் அனுமதி பெற வேண்டும். ஊர்வலத்திற்கு புதிய வழிகள் மற்றும் சிலை கரைப்பதற்கு புதிய இடங்கள் தேர்வு செய்தல் மற்றும் அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும்.
விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் இடத்தில் கடலில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க தீயணைப்புத் துறை, நீச்சல் பயிற்சி பெற்றவர்கள், உள்ளூர் மீனவர்கள் ஆகியோர் தயார் நிலையில் இருக்க வேண்டும். விநாயகர் சிலைகள் வைத்திருக்கும் இடங்களில் தீத்தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இன்றி விழாவை கொண்டாட வேண்டும்’ என்றார்.