Economy, business and finance
ரூ.25,000: பி.எப்.,க்கான சம்பள வரம்பு உயர்வு : நிறுவனம், ஊழியர்களின் பங்களிப்புத்தொகை கூடும்

புதுடில்லி: பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கு தகுதியான சம்பள மாத சம்பள வரம்பு 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் மாதாந்திர பி.எப்., பங்களிப்பு 3,000 ரூபாயாக அதிகரிக்கும். நிறுவனமும் அதே அளவு பங்களிப்பு செய்ய வேண்டியிருக்கும்.
பி.எப்., திட்டத்தில் இதுவரை, புதிதாக வேலைக்கு சேருவோரின் அடிப்படை சம்பளம் 15,000 ரூபாய் வரை உள்ளவர்களுக்கே கட்டாய சமூக பாதுகாப்பு பொருந்தியது. அதற்கு மேல் சம்பளம் பெற்று புதிதாக சேருபவர்களை நிறுவனங்கள் கட்டாயமாக பி.எப்.,-க்குள் சேர்க்க வேண்டியதில்லை.
அப்படியே சேர்க்கப்பட்டு அவர்களின் சம்பளம் 1 லட்சம் ரூபாயாக இருந்தாலும், 15,000 ரூபாய் வரம்பை பின்பற்றி ஊழியர் மற்றும் நிறுவனம் தலா 1,800 பங்களிப்பு செலுத்தினால் போதும். கடந்த 2014 செப்டம்பரில் முதல் இந்த நிலையே தொடர்கிறது.
இந்நிலையில் இந்த ஊதிய வரம்பை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என தொழிலாளர் நல அமைப்புகள் கோரி வந்தன. அதன்படி பி.எப்., பங்களிப்புக்கான வரம்பு 25,000 ஆக உயர்த்தும் திட்டம் முன் வைக்கப்பட்டது.
இந்த திட்டத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதன் வாயிலாக, ஊழியர்களின் மாதாந்திர பி.எப்., பங்களிப்பு 3,000 ரூபாயாக அதிகரிக்கும். நிறுவனமும் அதே அளவு பங்களிப்பு செய்ய வேண்டியிருக்கும்.
பி.எப்., சேமிப்பும், ஓய்வூதிய நிதிக்கான பங்களிப்பும் அதிகரித்து, நீண்டகால சமூக பாதுகாப்பு வலுப்பெறும்.
புதிய சம்பள உச்சவரம்பால், 51 லட்சத்துக்கும் மேற்பட்ட கூடுதல் ஊழியர்கள் கட்டாய சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வருவர் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இதன் மூலம் முறைப்படுத்தப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையும், ஓய்வுக்கால சமூக பாதுகாப்பு வரம்பும் விரிவடையும்.
சமீபத்திய இ.பி.எப்.ஓ., தரவுகளின்படி 7.98 கோடி ஊழியர்கள் பங்களிப்பு உறுப்பினர்களாக உள்ளனர். 7.68 லட்சம் நிறுவனங்கள் பங்களிப்பு செய்யும் நிறுவனங்களாக உள்ளன. ஊழியர்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 82 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர்.