Politics
கூடுதலாக நான்கு தளங்கள் கட்டியதே டில்லி ஹாஸ்டல் இடிந்து விழ காரணம் போலீஸ் அறிக்கையில் தகவல்
புதுடில்லி: டில்லியில், ஏழு பேரை பலி வாங்கிய ஹாஸ்டல் கட்டடத்தின் அடித்தளம் பலவீனமாக இருப்பதை அறிந்தும், வருமானம் ஈட்டும் பேராசையில் சட்டவிரோதமாக கூடுதலாக நான்கு தளங்களை உரிமையாளர்கள் கட்டி உள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
தெற்கு டில்லியின் சத்யா நிகேதன் பகுதியில், 50 ஆண்டுகள் பழமையான ஐந்து மாடி கட்டடத்தில் இயங்கி வந்த ஆண்களுக்கான ஹாஸ்டல் கடந்த 6ம் தேதி இடிந்து தரைமட்டமானது. இதில், ஏழு பேர் பலியாகினர். 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் விபரம்:
விபத்துக்குள்ளான கட்டடம், 50 ஆண்டுகள் பழமையானது. இந்த பழமையான கட்டடத்திற்கு முறையான துாண்கள் அல்லது பீம்கள் போன்ற வலுவான அடித்தள அமைப்புகள் எதுவும் இல்லை. கட்டடத்தின் அடித்தளம் மிகவும் பலவீனமாக இருப்பதை நன்கு அறிந்திருந்தும், அதிக வாடகை வருமானம் ஈட்ட வேண்டும் என்ற பேராசையில், உரிமையாளர்கள் பழைய கட்டடத்தின் மேல் கூடுதலாக நான்கு தளங்களை சட்டவிரோதமாகக் கட்டியுள்ளனர்.
இந்த கூடுதல் எடை, கட்டடத்தின் உறுதித்தன்மையைப் பாதித்துள்ளது. அதோடு கட்டடத்தின் அடித்தளப் பகுதியில் ஆபத்தான முறையில் தோண்டும் பணிகள் நடந்து வந்ததும், இந்த விபத்துக்கு காரணமாக அமைந்தது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் கட்டுமானத்திற்கு யார் அனுமதி அளித்தது? தளங்களை அமைக்கும்முன் கட்டமைப்புக்கான உரிய பாதுகாப்பு மதிப்பீடுகள் பெறப்பட்டனவா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.