Religion
“நன்னீராட்டு பெருவிழா சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி...” - முதல்வர் விஜய்!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் திருக்குடமுழுக்கு பெருவிழா நாளை (17.09.2026 - வியாழக்கிழமை) காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்காக முதற்கட்டமாக, பரிவார மூர்த்திகளுக்கான திருக்குடமுழுக்கு இன்று (16.09.2026)) காலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெருவிழாவைக் காண தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து பக்தர்களுக்காக ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
அதன்படி கோயிலில் 32.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திருப்பணிகள் மற்றும் புனரமைப்பு வேலைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இந்த விழாவிற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பையும், அவசரக் காலத் தேவைகளையும் உறுதி செய்யும் பொருட்டு, அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படக்கூடிய நவீன கட்டுப்பாட்டு அறை முழு வீச்சில் அமைக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ உதவிகளுக்காக அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவ உதவி மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 108 அவசர ஊர்திகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தீவிரப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயிலுக்குள் செல்ல முடியாத லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆன்மீகப் பெருவிழாவை நகரின் முக்கியப் பகுதிகளிலிருந்தே நேரடியாகக் கண்டு தரிசிக்கும் வகையில், முக்கிய இடங்களில் வண்ணத் திரைகள் அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தடையற்ற குடிநீர் வசதி, தற்காலிகக் கழிப்பறைகள் உள்ளிட்ட தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திருக்குடமுழுக்கு பெருவிழா எவ்வித தடையுமின்றி, மிக அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நிறைவேறுவதை உறுதி செய்ய இந்து சமய அறநிலையத்துறை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாகத் தமிழக முதல்வர் விஜய் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும். நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்!” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)