Religion
வியாழக்கிழமை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா..! ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெறவுள்ள நிலையில், குடமுழுக்கு விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மகா பூரணாஹூதியும், கடம் புறப்பாடும் நடைபெறும் எனவும், காலை 7.40 மணியில் இருந்து 8.10 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடமுடமுழுக்கு முடிந்து அபிஷேக ஆராதனை நிறைவு பெற்றப் பிறகு காலை 10 மணி முதல் பக்தர்கள் தொடர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரை வீதிகளில் அனுமதி அட்டை பெற்ற பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும், நான்கு ஆவணி மூல வீதிகள் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கோயிலை சுற்றியுள்ள வீடுகள், வணிக கட்டிடங்கள் மீது கூட்டத்தை கூட்டினால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் கியூஆர் கோடுடன் கூடிய வழிகாட்டி பலகை, 30 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம், 26 இடங்களில் குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்கள் வருகைக்காக பழங்காநத்தம் சீட்டு ரவுண்டானா, எல்லிஸ் நகர், வெஸ்டன் பார்க் ஹோட்டல், கோரிப்பாளையம் சந்திப்பு மற்றும் தெப்பக்குளம் 16 கால் மண்டபம் ஆகிய 5 இடங்களில் தற்காலிகமாக பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் குடமுழுக்கு விழாவை பார்ப்பதற்கு 51 இடங்களில் எல்.இ.டி திரையில் நேரலை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.