Politics
'விவசாயிகள் கண்ணீர்... மேட்டூர் அணை அரசியலில் சிக்கிய 4 கோடி' -விளாசும் பால்கி

விவசாயிகளின் வாழ்வாதாரம் என்பது ஒரு மாநிலத்தின் முதுகெலும்பாகும். மேட்டூர் அணை திறப்பு, டெல்டா பாசனம் மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விவசாயிகளின் நிலையை அரசியல் விமர்சகர் பால்கி விளக்கியுள்ளார்.
அரசியல் விமர்சகர் பால்கி நக்கீரன் டிவிக்கு கொடுத்த பிரத்யேக நேர்காணலில் இதுகுறித்து கூறுகையில், ''விவசாயத் துறையில் இந்த ஆளும் தவெக அரசு செய்து வருவது வெறும் விளம்பர அரசியல் மட்டுமே . மேட்டூர் அணையைத் திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் சென்றபோது, அவரைப் பாதுகாக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மட்டுமே 4 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த மேட்டூர் அணையின் பராமரிப்புச் செலவே அஞ்சே முக்கால் கோடி ரூபாய் தான். இந்த விளம்பர ஷோ காட்டுவதற்காக அதிகாரிகள் சொன்ன பேச்சைக் கேட்டுத் தண்ணீரைத் திறந்து விட்டார்களே தவிர, அந்தத் தண்ணீர் முக்கொம்பைத் தாண்டி கடலூர் போன்ற மாவட்டங்களுக்கு இன்னும் முழுமையாகச் சென்று சேரவே இல்லை.
அன்புமணி ராமதாஸ் கேட்பது போலச் சம்பா பயிருக்கான தண்ணீர் முழுமையாகக் கிடைக்குமா என்ற கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை. 45 நாட்களுக்கு மட்டுமே வரக்கூடிய தண்ணீரை வைத்துக் கொண்டு விவசாயிகள் எப்படிச் சம்பா பயிர்களை நடுவார்கள்? அரசு அறிவித்த 12 விவசாயப் பொருட்களை வைத்துக் கொண்டு விவசாயிகளால் இந்தச் குறுகிய காலத்தில் எதையும் நட்டுப் பயிர் எடுக்க முடியாது என்று காலையில் விவசாயிகளுடன் பேசும்போது அவர்கள் அழுதுகொண்டே தகவல் தருகிறார்கள். விவசாயம் தெரியாத அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு முதலமைச்சர் செயல்படுகிறார். அதேபோல, சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி அவர்கள் கேட்ட கேள்வியின்படி, கடந்த 13 நாட்களாகத் தமிழகத்தில் நெல் கொள்முதல் எங்குமே முறையாக நடக்கவில்லை.
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் அனைத்தும் தேங்கிக் கிடக்கின்றன. திடீரென மழை வந்தால் அந்த நெல் அனைத்தும் நனைந்து வீணாகிவிடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் இருக்கிறார்கள். இந்த வேகமான கொள்முதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அதிகாரிகளும் முற்றிலும் தோல்வியடைந்துள்ளனர்.
இதற்கெல்லாம் தீர்வு சொல்ல வேண்டிய வேளாண்மைத் துறையோ அல்லது முதலமைச்சரோ சட்டமன்றத்தில் மௌனம் காப்பது விவசாயிகளுக்குச் செய்யும் துரோகம். விலைவாசி உயர்வு மற்றும் நெல் கொள்முதல் போன்ற மிக முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவே, சபாநாயகரைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அவையை விட்டு வெளியேற்றி இந்த தவெக அரசு நாடகமாடுகிறது'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)