Religion
விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரம்

திருக்கனுார்: விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான புதுக்குப்பம் கிராமத்தில், 7 குதிரைகள் பூட்டிய வாகனத்தில் தோன்றும் சூரிய நாராயணர் விநாயகர், எலி வாகனத்தின் மீது அமர்ந்த விநாயகர், சிவன்–பார்வதி மற்றும் ரதத்தில் செல்வது போன்ற விநாயகர், ஆஞ்சநேயர் வடிவிலான விநாயகர், 7 காளைகள் பூட்டிய வாகனம், முருகன் மற்றும் குடும்ப சமேத விநாயகர் என புதிய வகையில் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தயார் செய்து வருகின்றனர்.
3 அடி முதல் 15 அடி உயரம் வரையில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு, வண்ணம் பூசம் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சிலைகள் 3 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை உயரத்தின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து விநாயகர் சிலை செய்யும் தொழிலாளி ரகு கூறுகையில், ‘இங்கு செய்யப்படும் விநாயகர் சிலைகள் அனைத்தும் இயற்கையான முறையில் பேப்பர் மாவு, மரவள்ளிக்கிழங்கு மாவு கூழ் ஆகியவை மட்டுமே இணைத்து வடிவமைக்கப்படுகிறது.
இதில் பயன்படுத்தப்படும் பெயிண்ட்களும், வாட்டர் பெயிண்ட் தான். ரசாயன பொருட்கள் எதுவுமே இந்த சிலைகளில் கலப்படம் செய்யப்படுவதில்லை’ என்றார்.
இதேபோல், பிள்ளையார்குப்பம், கூனிமுடக்கு உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் தயார் செய்யும் பணி மும்மரமாக நடந்து வருகிறது.