Politics
மா.கம்யூ.,கட்சி எந்த கூட்டணியிலும் இல்லை :மாஜி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தகவல்
திண்டிவனம்: ''மிசா காலத்து கொடுமையை முதல்வர் விஜய் சந்தித்து இருந்தால் அரை மணி நேரம் தாங்கியிருப்பாரா'' என்று மா.கம்யூ.,முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் திண்டிவனத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டமசபையில் மக்கள் பிரச்னைகளை ஆழமாகப் பேசாமல், ஏதோ தனிப்பட்ட விரோதங்களைத் தீர்த்துக்கொள்வது போலப் பட்டிமன்றம் போல் விவாதிக்கிறார்கள்.
காவல்துறை மானியக் கோரிக்கையின் மீது முதல்வர் பதில் சொல்லும்போது, ஒரு மாநிலத்தின் பிரதிநிதியாக நிதானமாக பதில் சொல்லியிருக்க வேண்டும். 'குறைகள் இருந்தால் திருத்திக்கொள்கிறோம்' என்று கூறுவதுதான் முறை.
ஆனால், முதல்வர் சட்டசபையில், பேசிய உடல்மொழி கொஞ்சம் கூட நியாயமில்லை. பொறுப்பு வாய்ந்த ஒரு முதல்வருக்கு பொருத்தமானதாக இல்லை.
முதல்வர் இப்படி பேசினால் அவருடன் இருக்கும் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் எப்படி பேசுவார்கள். இது எங்கோ போய் முடியும்.
முதல்வரின் உடல்மொழி பொருத்தமாக அமையவில்லை என்பது வருத்தமான ஒன்று. ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் சட்டசபையில், கூறுவதால் என்ன பயன்? காவல்துறை, ஊழல் தடுப்பு துறை இருக்கிறது. வழக்கு போடுங்கள். விசாரணை நடத்தி தண்டனை கொடுங்கள். சட்டசபையில், ஆதாரம் காட்டினால் என்ன நடக்கும். அமலாக்கத்துறை வழக்கு போட்டால் உண்மையாகிவிடுமா?
அவசரநிலைக் காலம் (மிசா) என்பது நாட்டின் துயரமான, சர்வாதிகார ஆட்சி நடந்த காலம். மிசா சட்டத்தை பயன்படுத்தி தமிழக சிறைகளில் பல தலைவர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்கள்; பலர் உயிரிழந்தனர்.
அந்தச் சிறைச்சாலைத் தாக்குதலை நியாயப்படுத்துவதும், தாக்குதலுக்கு உள்ளானவர்களைச் சட்டசபையில்,
கொச்சைப்படுத்தி முதல்வர் பேசுவது வன்மையான கண்டனத்திற்குறியது. மிசா காலத்து கொடுமையை முதல்வர் விஜய் சந்தித்து இருந்தால் அரை மணி நேரம் தாங்கியிருப்பாரா?
மா.கம்யூ., எந்தச் சூழ்நிலையிலும் அமைச்சரவையில் சேர மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஆட்சி அமையாமல் போய்விடக் கூடாது என்பதற்காகவே த.வெ.க.,விற்கு ஆதரவு அளித்தோம். மற்றபடி அமைச்சரவையில் பங்கேற்பதோ, கூட்டணி கூட்டங்களுக்குச் செல்வதோ இல்லை. தற்சமயம் நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை. இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கியுள்ளோம்.
தமிழகத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கான, இடைத்தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசித்தான் எந்த கட்சிக்கு ஆதரவு கொடுப்பது என்று முடிவெடுக்கப்படும்.
தேர்தலுக்கு முன்பாகவே பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்துவது தவறானது. பா.ஜ.,வை வீழ்த்த அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு முன்பே பிரதமர் வேட்பாளரை அறிவித்தால் அது அணிக்குள் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும்.
இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், தாலுகா செயலாளர் கண்ணதாசன் உடனிருந்தனர்.