Arts, culture, entertainment and media
டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்டிற்கு எதிர்ப்பு: மாவட்ட மேலாளர் அலுவலகம் முற்றுகை

விழுப்புரம்: டாஸ்மாக் கடைகளை திறக்காமல், விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அடுத்த திருப்பாச்சாவடிமேடு எம்.ஜி.ஆர்., நகர் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக வசூல் செய்வதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, டாஸ்மாக் உதவி மேலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தபோது, கூடுதலாக பணம் வசூலித்தது தெரியவந்தது. தொடர்ந்து, அங்கு பணிபுரியும் மேற்பார்வையாளர்கள் சுரேஷ், சிவக்குமார், சேல்ஸ்மேன்கள் முனியன், சுரேஷ், பாலசுப்பிரமணி, சக்திவேல் ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து மாவட்ட மேலாளர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள மொத்தம், 187 டாஸ்மாக் கடைகளில், 100க்கும் மேற்பட்ட கடைகளை ஊழியர்கள் திறக்கவில்லை. தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திருப்பச்சாவடிமேடு டாஸ்மாக் கடையில் பணியிலிருந்த முனியன் மீது மட்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மற்ற ஊழியர்கள் மீதான 'சஸ்பெண்ட்' நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து, டாஸ்மாக் ஊழியர்களிடம், மாவட்ட மேலாளர் செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊழியர்களின் கோரிக்கை குறித்து மேலாண் இயக்குனரிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.
இதை தொடர்ந்து, டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்று மதியம், 12:00 மணிக்கு திறக்க வேண்டிய கடையை ஒரு மணிநேரம் தாமதமாக திறந்தனர். டாஸ்மாக் கடைகள் மூடியிருந்ததால் குடிபிரியர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இச்சம்பவத்தால் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)