விநாயகர் விசர்ஜன ஊர்வலம்பாதுகாப்பு ஏற்பாடு மும்முரம்
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் மாநகர பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை ஊர்வலம் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழாவில், பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் சாமளாபுரம் ஏரியில் விசர்ஜனம் செய்வதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம், போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில், போலீஸ் அதிகாரிகள், மின்சாரம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், நெடுஞ்சாலை, வருவாய்த்துறை உட்பட துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஊர்வல பாதைகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உடனடியாக சரிசெய்யவும், விழா காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதுடன் தற்காலிக மின் இணைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கமிஷனர் அறிவுறுத்தினார். சிலைகள் கரைக்கப்படும் நீர்நிலை மற்றும் முக்கிய ஊர்வலப் பாதைகளில் தீயணைப்பு வாகனங்கள், மீட்புப் படகுகள், நீச்சல் வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.
ஊர்வல பாதைகளில் உள்ள சாலை பள்ளங்களை சீரமைத்து, போக்குவரத்து நெரிசலின்றி ஊர்வலம் பாதுகாப்பாக நடைபெற அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.