திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
விநாயகர் சதுர்த்தி ஊர்வல அனுமதி மனு: திருப்பூர் மாவட்ட காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. விசாரணை செப். 9-க்கு ஒத்திவைப்பு.
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மாவட்ட காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை, காட்டுப்பாளையம் பகுதியில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் அனுமதி கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக் கோரி, இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அன்புணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு ஆண்டுதோறும் பிறப்பிக்கப்படும் விதிமுறைகளை பின்பற்ற தயாராக இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, கடந்த ஆண்டு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்னை உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசுத் தரப்பில், விநாயகர் சிலை வைத்து, ஊர்வலம் நடத்த அனுமதி வழங்குவதில் என்ன பிரச்னை என மாவட்ட காவல்துறையினரிடம் கேட்டு பதிலளிப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ”திமுக ஆட்சியில் 7.5 முதல் 10% வரை லஞ்சம் என ED அறிக்கை...” - பேரவையில் CM விஜய் ஆவேசம்!
இதையடுத்து மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
