விநாயக சதுர்த்தி விழா ஊர்வலப் பாதை மாநகர போலீஸ் கமிஷனர் ஆய்வு
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் நடைபெற உள்ள சிலை விசர்ஜன ஊர்வலத்துக்கான பாதைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை, போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
வரும் 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஹிந்து அமைப்புகள் சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய்து, வழிபாடு மற்றும் விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து போலீசார் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஊர்வலம் செல்லும் கொங்கு மெயின் ரோடு, வெள்ளியங்காடு, செல்லம் நகர் மற்றும் ஊர்வலம் ஒன்று திரளும் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளை கமிஷனர் ஆய்வு செய்தார். ஊர்வல பாதை, போக்குவரத்து மாற்றம், மக்கள் நெரிசலை தவிர்ப்பது, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பதற்றமான பகுதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
துணை கமிஷனர்கள் ரமேஷ் கிருஷ்ணன், ஆகாஷ் ஜோஷி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.