Sport
ராமநாதபுரத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவங்கியது
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ் துவக்கி வைத்தார்.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 45 விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 47 ஆயிரத்து 63 பேர் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். இந்த விளையாட்டு போட்டிகள் அக்.,10 வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடக்கின்றன. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டியை அமைச்சர் ராஜிவ் துவங்கி வைத்தார். கல்லுாரி மாணவர்களுக்கான இறகுப்பந்து, பள்ளி மாணவர்களுக்கான கேரம், கைப்பந்து போட்டிகள் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடந்தது. கபடி போட்டி முகம்மது சதக் பொறியியல் கல்லுாரியிலும், கைப்பந்து போட்டி வேலுமனோகரன் கல்லுாரியிலும், கல்லுாரி மாணவிகளுக்கான இறகுப்பந்து போட்டி ராமநாதபுரம் ஓய்.ஆர்., ஸ்மாஷ் அகாடமியிலும் நடந்தது. தொடர்ந்து இன்று பள்ளி மாணவிகளுக்கான கேரம், கல்லுாரி மாணவிகளுக்கான சிலம்பம் போட்டிகள் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கிலும், கல்லுாரி மாணவர்கள், மாணவிகளுக்கான தடகள போட்டிகள் கலெக்டர் அலுவலக வளாகத்திலும் நடக்கிறது.